செங்கோட்டையன் வீசிய குண்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு?
மதுரை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை காலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கொட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அமமுகவும் விலகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமமுகவை கடைசி நேரத்தில் சேர்க்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கூறப்பட்டு வந்தது.

பாஜகவுக்கு கொடுக்கும் தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு அளிக்கப்படும் என்றும் பேசப்பட்டது. ஆனால் திடீரென பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இந்த முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் டெல்லி மேலிடத்தில் இருந்து அமமுகவுக்கு சாதகமான சிக்னல் கடந்த சில மாதங்களாகவே கொடுக்கப்படவில்லை.
இதனை உணர்ந்தே ஓபிஎஸ் கடந்த மாதமே விலகி இருக்கிறார். தற்போது அமமுகவும் விலகியதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் புதிய குண்டு ஒன்றை அதிமுகவிற்குள் வீசி இருக்கிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீசப்பட்டதாக தெரிகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கவில்லை என்றால், மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று கூறியதோடு, 10 நாட்களில் அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். 6 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், திடீரென அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசி இருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுவரை எந்தக் கருத்தையும் கூறவில்லை. இந்த நிலையில் மூக்கையா தேவர் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாளை மதுரை வரும் டிடிவி தினகரன், காலை ஹெரிடேஜ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் கருத்து தொடர்புடைய அறிவிப்பா அல்லது கூட்டணி தொடர்பான அறிவிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அமமுக விஜய்யின் தவெக உடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications