“பார்க்க அமைதியாக இருந்துகொண்டு.. மிகவும் நரித்தனமாக செயல்படுகிறார் விஜய்” - பாய்ந்த டிடிவி தினகரன்!
மதுரை: "பார்க்க அமைதியாக இருந்துகொண்டு.. மிகவும் நரித்தனமாக, விஷமத்தனமாக முதலமைச்சர் விஜய் செயல்படுகிறார்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தவெக ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. சினிமா துறையிலிருந்து வந்துள்ளார்கள் என நம்பி வாக்களித்தார்கள். அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தினார்கள். அமமுக எம்எல்ஏவையும் அப்படித்தான் செய்தார்கள்.

தந்திரமாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டும், நிறைவேற்றாத மாதிரியும் இருக்க வேண்டும் என செயல்படுத்துகிறார்கள். காவிரி நீரைத் திறக்கச் சென்றவர் எம்ஜிஆர் போன்று செய்துள்ளார். அப்படி செய்தால் மட்டும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.
உசிலம்பட்டி மக்கள் சட்டை போடக்கூட வழி இல்லை என்பது அறிவின்மைதான். காமராஜர் பல்கலைக்கழகத்தை கல்லூரியாக மாற்றச் சொல்கிறார்கள். அண்ணா காலத்தில் இளைஞர்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். இங்கு யாருக்காவது அடிப்படைப் புரிதல் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.
முதல்வருக்கு எழுதி வைத்ததைக்கூட சரியாகப் பேசத் தெரியவில்லை. சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுவது, திமுக, அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்ற அனுபவசாலிகள் பேசுவதை உதாசீனப்படுத்துவது போன்று இருக்கிறது. மாற்றம் வேண்டும் என யாரைக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தவெக அமைச்சர்களுக்கு பார்த்துகூட படிக்க தெரியவில்லை.
தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்றே தெரியாமல் ஒரு புரிதல் இல்லாமல் மக்கள் வாக்களித்துவிட்டனர். பிளாக் டிக்கெட் விற்று வந்தவர்கள் தானே.. அதனால்தான் சட்டமன்றத்தில் காட்டுக் கத்துக் கத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வர பெருபான்மையே இல்லை. தில்லுமுல்லு செய்து, மற்ற கட்சியில் இருப்பவர்களிடம் பதவி தருவதாக பேரம் பேசி ஆட்சிக்கு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஹிட்லர் ஆட்சிதான் நடக்கிறது. விஜய் அமைதியாகத் தெரிகிறாரே தவிர, மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, விஷமத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சு சினிமா வசனமாகத்தான் இருக்கும்.
அவர் ஆட்சிக்கு வருவோம் என நினைத்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கவில்லை. ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் விஜய் எடுப்பதாக தெரியவில்லை. முதலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்த புரிதல் இருக்குமா என்றே தெரியவில்லை. சட்டமன்றத்தில் இருந்து அவர்தான் வெளியே எழுந்து சென்றார். 3 நாட்கள் கழித்து சினிமா இயக்குநர் மாதிரி ஒரு அறிக்கையை படிக்கப் போகிறார்.
நான் அதிமுக இணை பொதுச்செயலாளர் என்பது வதந்திதான், அந்தப் பேச்சே இப்போதைக்கு இல்லை. தற்போதைய அரசு மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். முந்தைய அரசு எதுவும் செய்யவில்லை என்பது தவறு. தற்போது மறுபரிசீலனை செய்து உரியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் உங்களை அமைச்சர்களாக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
