அதிமுக இல்ல.. எதிமுக! 2026 தேர்தல் தோல்வி எடப்பாடிக்கு பதில் சொல்லும்! நேரம் பார்த்து அடித்த டிடிவி
மதுரை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை எனவும், 2026 தேர்தல் தோல்வி அவருக்கு பதில் அளிக்கும் என கூறியிருக்கிறார் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன்.
மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் வரிசையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சரும் மிக மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை,.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எதிர்ப்பை வெளிப்படுத்தினார் செங்கோட்டையன். அதற்குப் பிறகு அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கூறியனார்.

செங்கோட்டையன் நீக்கம்
இதனால், அவரது பதவிகள் பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாக இருந்த செங்கோட்டையன், திடீரென நேற்று முன்தினம் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் சென்று பங்கேற்றார். தொடர்ந்து டிடிவி தினகரன் ஓபிஎஸ் உடன் செய்தியாளர்களையும் சந்தித்தார். இந்த நிலையில் செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் பறிக்கப்படுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் எனவும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன் எனக் கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்டோர் செங்கோட்டையன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் திமுகவின் பி-டீம் எனவும் ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன் என கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் 2026 தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் சொல்லும் எனவும் பழனிச்சாமிக்கு பதவி வெறி, சுயநலம் அதிகமாய் இருப்பதாக விமர்சித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் விமர்சனம்
மதுரை சோழவந்தானில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," எடப்பாடி பழனிசாமி அவர் அழிவை அவரே தேடிக் கொள்கிறார். அவர் வீழ்ந்து விடுவார். இப்போது இருப்பது அதிமுக அல்ல எடப்பாடி திமுக.
செங்கோட்டையனை நீக்கும் அளவு பழனிசாமிக்கு தகுதியில்லை. தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வீழ்த்தப்படுவார். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தீவிரமான தொண்டன்; திறமையான நிர்வாகி.
2026 தேர்தல்
அதிமுகவில் செங்கோட்டையனை விட சீனியர் யாரும் இல்லை நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி வெறி சுயநலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2026 தேர்தல் தோல்வி அவருக்கு பதில் சொல்லும். நாங்கள் இல்லாமல் வெற்றி பெறுவோம் என சொன்ன அவர் 2024 மக்களவைத் தேர்தலில் ஏன் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications