தவெக மாநாட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபல பத்திரிகையாளர் முக்தார்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கிருந்த பிரபல பத்திரிக்கையாளரான முத்தாரை வெளியேற்றியுள்ளனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள். மாநாட்டின் முகப்பு வரை கூடவே வந்து, அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை இன்று நடத்துகிறார். திட்டமிட்டதற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியுள்ளது.
மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே 3 மணிக்கு மங்கள இசை உடன் மாநாடு தொடங்கியது. கடும் வெயில் கொளுத்திய நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்குவதாக அறிவித்தார் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்.

தவெக மதுரை மாநாடு
வழக்கம்போல் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருக்கும் ராம்ப் வாக்கில் வளம் வந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு கட்சியின் கொடியை ஏற்றுகிறார் விஜய். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்குகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டுமே பேசுகின்றனர். கொள்கை பாடல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 6:15 மணிக்கு விஜய் பேசுகிறார். 7:00 மணிக்கு எல்லாம் மாநாட்டை முடித்து விட வேண்டுமென நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
முக்தார் அகமது
இந்த நிலையில் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்து கூட பிரபல செய்தி சேனல்களில் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் மாநாட்டில் குவிந்துள்ளனர். அந்த வகையில் பிரபல பத்திரிகையாளரான முக்தார் அகமது மாநாட்டுக்கு வந்திருந்தார். முக கவசத்துடன் கண்ணாடி அணிந்தபடி மாநாட்டு திடலில் இருந்த அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வெளியேற்றியுள்ளனர்.
பத்திரிக்கையாளர் வெளியேற்றம்
மேலும் முக்தார் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டபடி காவல்துறை உதவியுடன் மாநாட்டு மேடையில் இருந்து மாநாட்டு முகப்பு வரை அவரை கூடவே அழைத்து வந்து வெளியேற்றி இருக்கின்றனர். மாநாடு தொடர்பாக திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பியதாகவும், அதன் காரணமாகவே அவரை வெளியேற்றியதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications