ஒன் இந்தியா விவாதத்தில் அசத்திய விஜய் ரசிகர்.. நேரில் அழைத்து பாராட்டி பதவி கொடுத்த தவெக தலைமை!
மதுரை: ஒன் இந்தியா தமிழ் சார்பாக மதுரையில் நடத்தப்பட்ட இளம் தலைமுறையும் அரசியலும் என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக கருத்துக்களை முன் வைத்ததால், பவுன்ராஜ் என்பவருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஐடி விங்கில் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டதோடு, தவெக திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் மருதுபாண்டியன் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி இருக்கிறார்.
சமீப காலமாக ஒன் இந்தியா தமிழ் தரப்பில் "Gen Z Talks" என்ற பெயரில் இளம் தலைமுறையும் அரசியலும் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. குறிப்பாக தவெகவில் இருக்கும் இளைஞர்கள், கரூர் சம்பவம் உள்ளிட்டவற்றை வைத்து அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.

ஒன் இந்தியா தமிழின் எடிட்டர் வீரக்குமரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு இளைஞர்கள் முன் அரசியல் கருத்துக்களுடனும் விவாதம் நடத்தினார். சென்னையில் நடத்தப்பட்ட இந்த விவாத நிகழ்ச்சி அரசியல் ரீதியாகவும், டிஜிட்டல் உலகிலும் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இளைஞர்கள் மத்தியிலும் புதிய விவாதத்தையும் உருவாக்கியது.
இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்ல ஒன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி 2ஆம் கட்டமாக மதுரையில் "Gen Z Talks" இளம் தலைமுறையும் அரசியலும் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியும் பரவலாக கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கலந்து கொண்டு பவுன்ராஜ் என்பவர் விஜய்க்கு ஆதரவாகவும், தவெகவுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களை ஏற்கும்படி முன் வைத்தார். குறிப்பாக கரூர் சம்பவம் தொடர்பாக பவுன்ராஜ் சில கேள்விகளையும் முன் வைத்திருந்தார். இது தவெக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து பவுன்ராஜ்க்கு தவெக சார்பாக மதுரை மாவட்ட ஐடி விங்கில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளராக மருதுபாண்டியன் நேரில் அழைத்து பவுன்ராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications