TVK - PMK: தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா? போகப் போகத் தெரியும்.. சூசகமாக சொன்ன அன்புமணி!
திருநெல்வேலி: 2026 சட்டசபைத் தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா என்பது போகப் போகத் தெரியும் என்றும் சூசகமாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளதால், திமுக மற்றும் அதிமுக மட்டுமல்லாமல் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திவிட்டன. அந்த வகையில் பாமக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தாலும், அன்புமணி தொடர்ச்சியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் வட மாவட்டங்களில் நடைபயணம் செய்த அன்புமணி, இப்போது தென் மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறார்.

ஒவ்வொரு பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களிலும் தீவிரமாக திமுகவை சாடி வரும் அன்புமணி, அதிமுக - பாஜக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இதுவரை அன்புமணி வெளிப்படையாக அதிமுகவுடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட, கடைசி நேரத்தில் பாஜக உடன் கூட்டணிக்கு சென்றார்.
ஒருவேளை கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்தால், அன்புமணியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அன்புமணி தனியாக பிரிந்து செயல்பட்டு வருவதால், ராமதாஸ் தரப்பு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற குழப்பமும் எழுந்துள்ளது. ஏனென்றால் பாமகவினரும் இரு பிரிவாக பிரிந்திருப்பதால், அந்தக் கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒருங்கிணைந்த பாமகவுடன் கூட்டணி அமைக்கவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விரும்பலாம். அதேபோல் தமிழக வெற்றிக் கழகமும் ஒரு வாய்ப்பாக உள்ளது. வட மாவட்டங்களில் தவெக வேகமாக வளர்ந்து வருவதோடு, விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனை அன்புமணியும் நன்றாக கவனித்தே வருகிறார். இதன் காரணமாகவே விஜய்யை விமர்சனம் செய்வதில் இருந்தும் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் திருநெல்வேலியில் மக்களை சந்தித்த அன்புமணி, தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக சேருமா என்பது போகப் போகவே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தவெகவை ஒரு முக்கிய வாய்ப்பாக அன்புமணி கருதுவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications