நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி கையில் எடுக்கும் அஸ்திரம்.. அதிமுக மாஜிக்கு சவால்!
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை வண்டியூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து 100 அடி கொடி மரத்தில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அவர் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்துவது தொடர்பாக காஞ்சிபுரம் முதல் இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தை துவங்கி மாவட்டம் தோறும் நடத்தி வருகிறோம். மதுரை தான் திமுக இளைஞர் அணியின் தாய் வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் 1980ஆம் ஆண்டு திமுக இளைஞரணி துவங்கப்பட்டது.
இந்தியாவிலேயே துவங்கப்பட்ட முதல் இளைஞர் அணி திமுகவுடையது தான். நமது இளைஞர் அணி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. நான் 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அமைச்சர் மூர்த்தி என்னை மதுரை அழைத்து மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். அன்று துவாங்கி தமிழ்நாடு முழுவதும் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்கிறார். நான் இப்போது சொல்கிறேன், திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன். திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக செயல்பட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெற்றது போல நீட் தேர்வை மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெறலாம். ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்? அதற்கு ஓர் உதாரணம் தருகிறேன், இந்தியாவின் முதல் குடிமகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் நடிகை எல்லாம் பங்கேற்கிறார்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், கைம்பெண் என்பதால் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை. இதுதான் சனாதனம். இதனால் தான் இதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ஒழிப்பதற்காக ரகசியம் எங்களுக்குத் தெரியும் என சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அதனை குறிப்பிட்டு அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications