மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி.. உற்சாக வரவேற்புக்கு ரெடியான உடன்பிறப்புகள்
மதுரை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பின்னர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுகிறது. இன்று இரவும் நடைபெறும் நிகழ்ச்சிக்காக உதயநிதி விமானம் மூலம் மதுரை வருகிறார். ஏன் முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படுகிறது என்பதற்கான முக்கிய காரணங்கள் சில சொல்லப்படுகின்றன.
தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாகவே, உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று பேச்சு அடிப்பட்டு வந்தது. திமுக விழா மேடைகளில் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் உதயநிதியை துணை முதல்வராக்குவது என்று பேசி வந்தனர். இது தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் பெரியதாக எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருந்து வந்தார். இப்படி இருக்கையில் நேற்று முன்தினம், உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு தரப்பில் கடிதம் பறந்திருக்கிறது.

அதன்படி, நேற்று மாலை துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இன்று மதுரையில் நடக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி, ஏன் மதுரையில் தனது முதல் நிகழ்ச்சியை நடத்துகிறார் என்று கேள்வி எழுந்தது.
இதற்கு கட்சியினர், "மதுரை சென்டிமென்டான இடம்" என்று பதிலளித்துள்ளனர். அதாவது, உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி மதுரையில்தான் நடத்தப்பட்டது. மதுரையில் நடைபெற்ற திமுக மூத்த உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார்.
அதேபோல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின்னரும், அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி மதுரையில்தான் நடைபெற்றது. இதனையடுத்து துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள முதல் நிகழ்ச்சியும் மதுரையில்தான் நடைபெறுகிறுது.
நிகழ்ச்சியின் விவரங்கள் குறித்து கட்சித்தலைமை விரிவாக குறிப்பிடவில்லை. ஆனால், இன்று இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் உதயநிதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவு பறந்திருக்கிறது.
நாளை, விருதுநகரில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications