சந்தையா? சாக்கடையா? மாட்டுத்தாவணிக்கு 3 கோடி தந்த ‘வத்தல் தாத்தா’: இதுவரை 14 கோடியை வாரி வழங்கிய வள்ளல்
மதுரை: பல கோடிகளைச் சம்பாதிப்பதற்கு காரணமாக இருந்த மதுரை மாட்டுத்தாவணி சந்தையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருவதற்காகத் தனது சொந்த பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை அள்ளி வழங்கி இருக்கிறார் 'வத்தல் தாத்தா' என்று அடைமொழி போட்டு அந்த ஊர் மக்களால் அழைக்கப்படும் டி.பி.ராஜேந்திரன்.
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுதான். அங்கேயேதான் மிகப்பெரிய காய்கறி சந்தையும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. சுற்றுவட்டாரங்களிலிருந்து மக்கள் இந்த சந்தைக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் காய்கறிகளை வாங்கி போவது வழக்கம். இங்கே கிட்டத்தட்ட 2 ஆயிரம் கடைகள் உள்ளன. அதில் பாதியளவு, அதாவது ஆயிரம் கடைகள் மட்டுமே பயன்பாட்டிலிருந்து வருகின்றன.

இங்கே உள்ள கடைகளில் ஒட்டுமொத்தமாக 3 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல், தள்ளு வண்டி, மாட்டு வண்டி, காய்கறிகளை ஏற்றி போகும் குட்டி யானை எனப் பலரும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தச் சந்தை பகுதிக்கு வியாபாரிகள், பொதுமக்கள் என தினமும் 10 ஆயிரம் பேர் வந்து போகின்றனர்.
இவ்வளவு மக்கள் அன்றாடம் புழங்கும் இந்தச் சந்தை பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துவதற்கான வசதியின்றி எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லை. இங்குள்ள சாலைகள் போடப்பட்டுப் பல ஆண்டுகளைக் கடந்திருக்கும் என்று அங்கே வந்து போகின்ற பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
குண்டும் குழியுமாக உள்ள இந்த சந்தையை விட்டால், வேறு கதியும் மதுரை மக்களுக்கு இல்லை என்பதால் பலரும் வந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பல சாலைகளில் சாக்கடை அப்படியே தேங்கி கொசு உற்பத்தியாகும் கூடாரமாகக் காட்சியளித்தும் வருகின்றது.

மேலும் மாடுகள் அதிகம் உலா வருவதால், அதன் சாணங்கள் மற்றும் கழிவுகள் அப்படியே சாலைகளில் மண்டி கிடக்கின்றன. இதற்காகப் பல முறை வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்கின்றனர் இந்தப் பகுதிவாசிகள்.
இதன் அவலநிலையை மதுரையில் உள்ள பல கோடீஸ்வரர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கைக்கட்டி வேண்டிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கும் போது மதுரை மண்ணின் மைந்தரான 'வத்தல்' தாத்தா இந்த சந்தையின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக 3 கோடி ரூபாயை நன்கொடையாக அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தத் தாத்தா கடந்த 2023 ஆம் ஆண்டு 14 கோடி ரூபாய் உள்ள தனது சொத்துகளை விற்று கல்விச் சேவை செய்து வருகிறார் எனச் செய்தி வெளியானது.
அப்போது இவரது சேவையை நேரடியாகச் சென்று சாலமன் பாப்பையா பாராட்டி சால்வை அணிவித்தார். அந்தச் செய்தியால் 'திருப்பதி விலாஸ்' வத்தல் கம்பெனி உரிமையாளரான டி.பி. ராஜேந்திரன் என்பவர் மதுரை மக்களால் வத்தல் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த ஆண்டு மதுரை சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் இவரை நேரில் அழைத்துப் பாராட்டி நினைவுப் பரிசையும் கொடுத்திருந்தார். பணத்தாசை பிடித்து அலையும் நபர்கள் வாழும் காலத்தில் இப்படி ஒருவரா எனப் பலரும் வாய் பிளந்து ஆச்சரியப்பட்டு நின்றனர். இந்நிலையில்தான் இப்போது மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டின் அடிப்படை வசதிகளைச் செய்வதற்காக, ரூ. 3 கோடியைத் தருவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கான பணிகள் எப்படி நடக்க உள்ளன? அதைப் பற்றி விளக்கம் அளித்த வத்தல் தாத்தா, "மூன்று கோடி என்பது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லீங்க. வரும் 23 ஆம் தேதி கட்டுமான வேலை தொடங்குவதற்காகச் சின்ன பூஜை போட இருக்கிறோம். பள்ளிக்கூடங்களுக்கு நான் செய்த உதவி கூட குறைவுதான். இந்தச் சந்தை இப்படிக் கிடப்பதைப் பார்க்கும்போதுதான் மனம் தாங்கவில்லை. ஆகவே இதை உடனே சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இந்தச் சந்தைதான் நான் சம்பாதிப்பதற்கு உதவியது.
அதை உணர்ந்துதான் இதைச் செய்ய முன்வந்தேன். இதற்காகக் கோடிகள் செலவானாலும் பிரச்சினை இல்லை. அங்குள்ள மார்க்கெட் வியாபாரிகள் எத்தனை காலம் ஆனாலும் என் பெயரைச் சொல்ல வேண்டும். நாளை வருபவர்கள் இப்படி ஒருத்தன் இருந்து சேவை செய்துள்ளான் என்று என்னை நினைத்துப் பார்ப்பார்கள் இல்லையா?" என்கிறார் இந்தக் கள்ளம் கபடம் இல்லாத வத்தல் தாத்தா. இவர் 87 வயதைக் கடந்தும் கூட இப்போது வரை ஓயாமல் உழைத்து வருகிறார். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு சுறுசுறுப்பு குறையாமல் செய்து வருகிறார். இவர் வீடு முழுக்க ஏகப்பட்ட விருதுகள், பதக்கங்கள் உள்ளன. அத்தனையும் இவர் சேவைக்காக வழங்கப்பட்டவை. அதில் ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கைப்பிடி அளவு கருணாநிதி சிலையும் உள்ளது.












Click it and Unblock the Notifications