தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா?
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் தவெக சார்பாக போட்டியிட அதிமுகவினர் பலரும் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனிடையே கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் வசூல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் கட்சித் தலைமைக்கு தெரியுமா என்று தவெகவினர் பலரும் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இணைந்துவிட்டன. முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளும் மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் சூழலில், அதிமுகவில் இருந்து லட்சக்கணக்கானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், அடுத்தக் கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களை தூக்க தவெக காய் நகர்த்தி வருகிறது. அதற்கு உள்ளாட்சித் தேர்தல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த வார்டுகளில் உள்ள மக்களை தெரிந்து வைத்திருப்பவர்களே வெல்ல முடியும்.
ஒவ்வொரு வார்டிலும் கட்டமைப்பு இல்லையென்றால், திமுகவுக்கு தவெகவால் ஈடு கொடுக்க முடியாது. இதனை தவெக உணர்ந்து அதிமுகவின் கட்டமைப்பை கபளீகரம் செய்து வருகிறது. நேற்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தவெகவில் இணைந்தார். அதேபோல் மதுரையில் அதிமுகவின் கட்டமைப்பு காலியாக தொடங்கி இருக்கிறது.
மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற கார்த்திகேயன் திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை தவெகவில் இணைத்து வருகிறார். மறுபக்கம் கல்லணை, தங்கப்பாண்டி மற்றும் மருதுபாண்டி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் செய்து வருகிறார்கள். இதனால் அதிமுகவில் இருப்பவர்கள் இம்முறை தவெக சார்பாக கவுன்சிலர் சீட் பெற தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் பெறப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தவெகவினர் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சி தொடங்கிய போது உழைத்தவர்களை விட்டு புதிதாக கட்சியில் இணைபவர்களுக்கு முக்கியவத்துவம் அளிப்பதா என்ற உட்கட்சி பூசல் தொடங்கி இருக்கிறது.
இதனிடையே கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் வாங்குவது கட்சித் தலைமைக்கு தெரியுமா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே சட்டசபைத் தேர்தலின் போது ரூ.2 கோடி பணம் கேட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதே பாணியில் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக நிர்வாகிகள் கலெக்ஷனில் ஈடுபடுவது விமர்சனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications