"மீண்டும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்?" யோசிக்காமல் ஒரே வரியில் நறுக்கென பதிலளித்த நடிகர் வடிவேலு
முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையை விவரிக்கும் புகைப்பட கண்காட்சியை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. இதற்கு திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட கண்காட்சி
இந்தக் கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் இளமைப் பருவம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அரசியல் பயணம் மிசா காலகட்டம் எனப் பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதைப் பலரும் நேரில் கண்டு வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், உள்ளிட்டோரும் இந்தக் கண்காட்சியைப் பார்த்தனர். இதைப் பார்வையிட்ட சமயத்தில் நடிகர் ரஜினி, முதல்வரின் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றுதான் என்றார்.

மதுரை
சென்னை போலவே பல்வேறு மாவட்டங்களிலும் முதல்வரின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி நேற்று மதுரையில் இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. மதுரை யாதவா ஆண்கள் கல்லூரிக்கு எதிரே மேனந்தல் மைதானம் உள்ளது. அங்கு தான் இந்த புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. அதன் திறப்பு விழா அமைச்சர் மூர்த்தியின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

நடிகர் வடிவேலு
இந்தப் புகைப்பட கண்காட்சியை நடிகர் வடிவேலு நேற்று மாலை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த முதல்வரின் அரிய படங்களை அவர் வியப்பாகப் பார்த்து ரசித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, "இந்த கண்காட்சியை அனைத்து மக்களும் பார்க்க வேண்டும். அனைவருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் வகையில் இது உள்ளது. நாட்டின் அனைத்து தலைவர்களுடன் ஸ்டாலின் இருக்கும் படங்கள் இதில் இருக்கிறது.

நீண்ட ஆயுள்
இந்த புகைப்பட கண்காட்சியில் இருக்கும் ஒவ்வொரு படமும் நம் அனைவருக்குமான பாடம். இந்தப் புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைக்க என்னை அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் மிசா காலத்தில் சிறையில் பட்ட துன்பங்களை விளக்கும் வகையிலான படங்களும் இதில் உள்ளது. அது தொடர்பான புத்தகமும் அதில் உள்ளது. அவர் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதை அனைவரது விருப்பம்.

மிசா திரைப்படம்
மிசா காலத்தில் ஸ்டாலின் அனுபவித்த துன்பங்களைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அதில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக இருந்தது. அதற்குள் உதயநிதி அமைச்சராகிவிட்டார். அதற்கு மிசா என்று பெயர் வைத்திருந்தார்கள். இதனால் அந்தப் படம் இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் உதயநிதி நடித்தால் தான் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அதில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்" என்றார்.

மீண்டும் பிரசாரம்
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்களா.. திமுக உடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விகளைச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நடிகர் வடிவேலு, "இந்த கேள்விக்கு எல்லாம் என்னுடைய பதில் ஒன்று தான்.. காலம் தான் பதில் சொல்லும்" என்றார். முன்னதாக கடந்த 2011 சட்டசபைத் தேர்தல் சமயத்திலும் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications