"கச்சத்தீவு சர்ச்சையில் என்ன தான் நடக்கிறது.." உள்ளே வரும் அமைச்சர் பிடிஆர்.. தடாலடி கருத்து
மதுரை: கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இது குறித்து தமிழக ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974இல் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இது தொடர்பான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டிருந்தார்.

கச்சத்தீவை மீண்டும் இந்தியா மீட்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் கோரிக்கையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கிடையே இப்போது இந்த கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
கச்சத்தீவு விவகாரம்: அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற்று அதை விமர்சித்திருந்தார். ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். மேலும் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக என இருவருமே தவறு செய்துள்ளார்கள் என்று சாடி வருகிறார்கள்.
அதற்கு திமுக தரப்பில் இருந்தும் கடுமையான பதிலடி தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சு வெங்கடேசனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. முதலில் ஒரு ரூபாய் வரியில் 35 பைசா நமக்குத் தந்தார்கள்.
தாக்கு: இப்போது அதை 29 பைசாவாக குறைத்துவிட்டார்கள். இதைப் பெருமையாக அவர்களே நாடாளுமன்றத்தில் வேற கூறுகிறார்கள். நமக்குக் கடன் வாங்க இருக்கும் வழிகளை ரத்து செய்கிறார்கள். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவை நாம் சிறப்பாகச் செயல்படுவதால் நல்ல மாநிலம் என்ற அடிப்படையில் கடன் தர முன்வருகிறார்கள்.. ஆனால், அதை ரத்து செய்து கொடுக்கக்கூடாது என நிறுத்துகிறார்கள். பேரிடர்கள் எதாவது வந்தால் ஒரு ரூபாய் கூட தருவதில்லை. நமது வரிப்பணத்தை எடுத்துச் சென்று சுருட்டி வைத்துக் கொள்கிறார்கள்.
இதைத் தருவதற்குப் பதிலாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். நாங்கள் சொல்லும் திட்டத்தில் தான் கல்வி கற்கவேண்டும். நாங்கள் சொல்லும் நீட் தேர்வைத் தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கிறார்கள். இப்படி எல்லாம் மாநில பட்டியலில் இருக்கும் உரிமைகளைப் பறிக்கிறார்கள்.
கச்சத்தீவு சர்ச்சை ஏன்: இதையெல்லாம் மறைக்கவே 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எடுத்துள்ளார்கள். அதிலும் கூட பாருங்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு, கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த காலத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார்கள். அதே நபர் புதிய பதிலை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்கள். இரண்டிற்கும் அத்தனை முரண்கள் இருக்கிறது. இப்படி பச்சைப் பொய்யைச் சொல்லி புரளி கிளப்பப் பார்க்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தைப் போன்ற படித்த மாநிலத்தில், அனைவரும் கல்வி பெற்ற மாநிலத்தில், பகுத்தறிவு இருக்கும் மாநிலத்தில் இதெல்லாம் வேலைக்காவது. பொய்களைச் சொல்லி தோல்வி மறைக்கும் இந்த ஆட்சி மேலும் ஒரு நாள் நீடித்தால் கூட அது இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து" என்று அவர் கூறினார்.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்:
கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடித்துள்ளதாக ப.சிதம்பரம் சாடியுள்ளார். 2015இல் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என இந்தியா ஒப்புக்கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்திவிட்டு இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை 1974இல் கையெழுத்தான முதல் ஒப்பந்தம் மீன்பிடி உரிமம் கொடுத்தாலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1976இல் கையெழுத்தான இரண்டாவது ஒப்பந்தம் மீன் பிடிக்கும் உரிமையைப் பறிகொடுத்துவிட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் திமுகவையும் சாடினார்.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்திரா காந்தி இலக்கைக்குக் கொடுத்தது ஏன்.. அப்போது மத்திய அரசு அப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம்.. தமிழகத்தில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகளை அதை எதிர்க்கவே செய்தது.












Click it and Unblock the Notifications