வெறும் நகைக்கடை மட்டுமல்ல! மறுமணம் முதல் பெண் சுதந்திரம் வரை பேசிய பிராண்ட்! தனிஷ்க்கின் பின்னணி
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், கடந்த சில நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. சாதாரணமாக எந்தவொரு நகைக்கடையில் திருட்டு நடந்தாலும், அது ஒரு சில நாட்கள் செய்தியாக மட்டுமே கடந்து போகும். ஆனால் இந்த விவகாரம் அப்படி இல்லை!
மதுரை தனிஷ்க் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், கடை ஊழியர் முதல் மாடு மேய்ப்பவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் எனச் சாமானிய மக்கள் பலரும் தாமாக முன்வந்து போலீசாருக்குத் துப்பு கொடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்கப் உதவி செய்துள்ளனர்.

மற்ற கடைகளை விட, இந்த குறிப்பிட்ட நகைக்கடை மீது சாமானிய மக்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறையும், நெருக்கமும் ஏற்பட்டுள்ளது என்பதற்குப் பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசின் பங்களிப்பு கொண்ட நிறுவனம்
பலருக்கும் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், தனிஷ்க் என்பது டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் ஆகும். இந்த டைட்டன் நிறுவனம், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மற்றும் டாடா குழுமம் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமாகும்.
இதில் தமிழ்நாடு அரசிற்கும் கணிசமான பங்கு உள்ளது. அதாவது, இந்த நிறுவனத்தின் லாபத்திலும், வளர்ச்சியிலும் நமது மாநில அரசிற்கும் பங்கு இருக்கிறது. அந்த வகையில், இது ஏதோ ஒரு தனிநபரின் கடை என்பதைத் தாண்டி, நமது மண்ணோடும் அரசோடும் தொடர்புடைய ஒரு நம்பிக்கையான நிறுவனம் என்ற உணர்வு மக்களிடம் இயல்பாகவே உள்ளது.
சமூகக் கருத்து கொண்ட விளம்பரங்கள்
மக்களின் மனதில் தனிஷ்க் நிறுவனம் இடம் பிடித்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் வெளியிடும் முற்போக்கான மற்றும் சமூகக் கருத்து கொண்ட விளம்பரங்கள் தான். வெறும் நகைகளை மட்டும் காட்டி விளம்பரம் செய்யாமல், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கதைகளைத் தங்கள் விளம்பரங்கள் மூலம் இவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக, ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்திற்கு நகை வாங்குவது போன்ற இவர்களின் விளம்பரம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் பெற்றது. தனது சிறிய குழந்தையுடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணுக்கு, அவரது வருங்காலக் கணவர் காட்டும் அன்பையும், புதிய வாழ்க்கையைத் தொடங்கத் தங்க நகைகள் வாங்கி மகிழ்வதையும் மிக அழகாகவும், கண்ணியமாகவும் அந்த விளம்பரத்தில் காட்டியிருப்பார்கள்.
அதுமட்டுமின்றி, வேலைக்குச் செல்லும் பெண்களின் சுதந்திரம், வயதான தம்பதியரின் காதல், சாதி மதங்களைத் தாண்டிய மனிதநேயம் எனப் பல உன்னதமான கருத்துகளைத் தங்கள் விளம்பரங்கள் மூலம் தனிஷ்க் தொடர்ந்து மக்கள் மனதில் விதைத்து வருகிறது.
மக்களின் நம்பிக்கையும், அக்கறையும்
தங்கத்தின் தரத்தில் காட்டும் நேர்மையோடு, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒரு பிராண்டாக தனிஷ்க் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நமது மாநில அரசின் பங்களிப்பு கொண்ட நிறுவனம் என்பதாலும், பெண்களின் உணர்வுகளுக்கும் சமூக மாற்றத்திற்கும் மதிப்பளிக்கும் ஒரு பிராண்ட் என்பதாலும் தான் இந்த கடை கவனம் பெறுகிறது.
இந்த நகைக்கடையில் கொள்ளை நடந்தபோது சாமானிய மக்கள் அதைத் தங்கள் வீட்டுப் பிரச்சனை போலப் பார்த்து விழிப்புணர்வுடன் செயல்பட்டுள்ளனர். அதன் விளைவாகவே, கொள்ளை போன மொத்த நகைகளும் 2 நாட்களில் மீட்கப்பட்டு, குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
