“யாரை ஏமாற்ற? லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்" - ஐகோர்ட் காட்டம்!
மதுரை: "லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். நீதிமன்றம் உத்தரவிட்டே நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தொண்டி பேரூராட்சி தலைவி மற்றும் துணைத் தலைவியின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு உள்ளது என்றும், பேரூராட்சி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பது ஆர்டிஐ மூலம் உறுதிசெய்யப்பட்டது என்றும் அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரூராட்சி இயக்குநர், பேரூராட்சியின் 6 செயல் அலுவலர்கள் மீது குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவில்லை என்பதால், லஞ்ச ஒழிப்பு எஸ்.பி ராஜாராம் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் உத்தரவிட்டு 1 ஆண்டு ஆகியும் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. தமிழகத்தில் இதுபோன்று மாவட்டத்தில் ஒரு வழக்கு பதிவு செய்தாலே பேரூராட்சியில் ஊழல் இருக்காது. ஆனால் இதுவரை செய்யவில்லை.
லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். யாரை ஏமாற்ற நினைக்கிறீர்கள்? நீதிமன்றம் உத்தரவிட்டே நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா? வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி புகழேந்தி.


Click it and Unblock the Notifications
