மதுரை ஏர்போர்ட்டில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கோஷமிட்ட திமுக எம்.எல்.ஏ மகன்.. பரபரப்பு!
மதுரை: மதுரை ஏர்போர்ட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, ஐகோர்ட் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கோஷமிட்ட இளைஞரை போலீசார், வாயைப் பொத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர். நீதிபதிக்கு எதிராக கோஷம் போட்டவர் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலமாக சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய வளாகத்தில் அவர் நடந்து வந்தபோது, தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு வழியனுப்பினர்.

அப்போது, திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் மகனும், டெல்லியில் சட்டக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருபவருமான அக்ஷய் என்பவர் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார். நீதிபதி பெயரைக் குறிப்பிட்டு “ஒழிக... ஒழிக...” என்று அவர் கோஷமிட்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் தான், அந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதற்கு அரசு அனுமதி மறுத்தது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது இரு நீதிபதிகள் அமர்வின் முன்பாக நடைபெற்ற கடும் வாதங்களின் முடிவில் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அன்றே தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், அதற்கும் அனுமதி மறுத்த தமிழக அரசு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது. நேற்று மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினும் இதுபற்றி பேசி இருந்தார். இந்நிலையில் தான் திமுக எம்.எல்.ஏவின் மகன் அக்ஷய், மதுரை விமான நிலையத்தில் நீதிபதியைக் கண்டித்து குரல் எழுப்பியுள்ளார். போலீசார் இளைஞரின் வாயை பொத்தி காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அக்ஷய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் ஒழிக... ஒழிக... நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். தமிழக முதல்வர் இந்த நாட்டின் குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.
தனது சொந்த கருத்துகளை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார். அந்த தீர்ப்பின் மூலம் 'என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை. நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றிவிடுவேன்' என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார்.
அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். இதையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நாம் இதைச் செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன். ஒழிக... ஒழிக... நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்.
ஊழல் என்பது பணத்தால் மட்டும் கிடையாது. கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று கரப்டட் கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்றுத் தருவார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications