கர்நாடகா: லோக்சபா தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் பயங்கர சதியா? தட்சிண கன்னடாவில் ஊடுருவல்!
மங்களூர்: கர்நாடகாவில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் தட்சிண கன்னடா பகுதிகளில் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இரு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தட்சிண கன்னடாவின் கடபா பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அண்மை காலமாக அதிகரித்துள்ளதாம்.
கடபா பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டுக்குள் ஆயுதங்களை காட்டி மிரட்டு நுழைந்த மாவோயிஸ்டுகள் அங்கே தங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். கடபா விவசாயி வீட்டில் 2 மணிநேரம் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு சதி ஆலோசனை நட்த்தி இருக்கின்றனராம். அத்துடன் விவசாயி வீட்டில் இருந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மிரட்டி எடுத்துச் சென்றனராம் மாவோயிஸ்டுகள்.
மாவோயிஸ்டுகள் தங்களது வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றது தொடர்பாக போலீசாருக்கு பாதிக்கப்பட்ட விவசாயி தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு உடனடியாக விரைந்த மாவோயிஸ்டுகள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல குக்கே சுப்பிரமணியா வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மையம் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் தங்களது பகுதியை கபினி தளம் என அழைக்கின்றனர். கபினி தளம் மாவோயிஸ்டுகள் அனைவரும் கன்னட மொழியை பேசக் கூடியவர்களாம். சில வாரங்களுக்கு முன்னர் ஹாசன் வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாடியதும் தெரியவந்திருந்தது.
கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அடுத்தடுத்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த தகவல்கள் வெளியாவதால் அங்கு பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவுகிறது.
மாவோயிஸ்டுகள் குழுவின் தலைவரான விக்ரம் கவுடா தலைமையிலான பிரிவினரே குடகு, தட்சிண கன்னடா பகுதிகளில் ஊடுருவியிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications