என்னை அறிமுகப்படுத்தியதே பவா செல்லத்துரைதான்.. கும்பல் தாக்குதல் வேண்டாம்! மனுஷ்ய புத்திரன் ஆவேசம்
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை மீது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்.
பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக விசித்திரா தெரிவித்த கருத்தால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வெளியிலும் கல்வி முக்கியமா? இல்லையா? என்ற விவாதம் எழுந்தது. அதில் பவா செல்லத்துரை தெரிவித்த கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் அவர் கதை சொல்லும்போது தெரிவித்த கருத்துக்களும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்களை பலர் முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன். அதில், "பவா செல்லத்துரையின் எந்த விருந்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. அவர் எனக்காக எந்தக் கூட்டத்தையும் நடத்தியதில்லை. பரஸ்பரம் நாங்கள் எந்தப் பயனும் பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் அவர் மீது இப்போது நடத்தப்படும் தாக்குதல் நியாயமற்றது என நினைக்கிறேன்.
1993 ல் என்று நினைவு. நான் சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் ஒரு பார்வையாளனாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். என்னை யாருக்கும் தெரியாது. எனக்கும் யாரையும் தெரியாது. அப்போதுதான் 'என் படுக்கையறையில் ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பு வெளிவந்த சமயம். பவா செல்லத்துரை மாநாட்டில் உரையாற்றும்போது கால்களின் ஆல்பம் கவிதையை வாசித்து 'மனுஷ்ய புத்திரன் என புதிதாக ஒருவர் எழுத வந்திருக்கிறார்' என அறிமுகப்படுத்துகிறார். நான் அங்கிருக்கிறேன் என்று கூட அவருக்குத் தெரியாது.
மேடை ஒன்றில் என் பெயர் முதலில் உச்சரிக்கப்பட்ட தருணம் அது. ஒரு இளம் கவிஞனாக அது எனக்குத் தந்த உவகைக்கும் உற்சாகத்திற்கும் எல்லை இல்லை. பின் வந்த காலங்களில் பவா ஏராளமான கதைகளையும் கவிதைகளையும் இலக்கியப் பரிச்சயம் அற்றவர்களுக்குச் சொன்னார். அவர் சொல்லும் முறை பற்றி சிலருக்கு அபிப்ராய வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அவர் செய்தது ஒரு அத்யாவசியமான பணி. இலட்சகணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பல்கலைக்கழக பேராசியர்கள் எவரும் செய்யத் தவறிய பணி.
அவர் நிறைய எழுத்தாளர்களின் பெயர்களை நிறையப்பேருக்கு அறிமுகப்படுத்தினார். அவரது கதைகளை கேட்டவர்களில் புத்தகங்களை தேடிவந்தார்கள். அவருக்கு பாரபட்சம் இருந்தது என்று சொல்ல முடியாது. அவருக்கு பிடித்ததை அவர் பேசினார். அதை அடிப்படையான சமுதாயப்பணி அல்லது இலக்கியப் பணி என்றே கருதுகிறேன். அவர் அதைவைத்து பணம் சம்பாதித்தார் என்பதெல்லாம் மிகையான கற்பனை. ஒரு பட்டிமன்ற பேச்சாளரின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அவர் பெற்றிருக்கமாட்டார்.
அவருக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி பிரபலம் அடையும் வெளிச்சத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கிடையாது. பிக்பாஸில் அவர் கல்வி குறித்து சொன்ன கருத்திற்கு நான் எதிர்வினையாற்றினேன். அது ஒரு கருத்தியல் விவாதம். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. பவாவின் ஒட்டுமொத்த இருப்பையும் செயல்பாட்டையும் இழிவுபடுத்தும் தாக்குதல் மிகவும் வருத்தத்திற்குரியது. இது ஒரு கும்பல் மனோபாவம். அவர் நம்மில் ஒருவர். நாம் எல்லோரையும் ஒழித்துக்கட்டிவிட்டு என்ன செய்யப்போகிறோம்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications