மும்பையில் ஷாக்.. 2 டோஸ் வேக்சின் போட்ட 28 மாணவர்களுக்கு கொரோனா.. என்ன காரணம் தெரியுமா
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 30 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 28 மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களாகும்.
கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் சவாலான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
ஆல்பா, பீட்டா, டெல்டா என்று கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இது அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.

கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் டெல்டா கொரோனா காரணமாகக் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்றது. அப்போது தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 4 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்தது. அதேபோல வேக்சின் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதால், ஊரடங்கு விதிகளில் மெல்லத் தளர்த்தப்பட்டு வருகிறது.

30 பேருக்கு பாதிப்பு
கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளி. கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா இப்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகிறது. அதேநேரம் ஒரு அறையில் பல மாணவர்கள் இருப்பதால், மாணவர்களிடையே கொரோனா பரவும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு கல்லூரியில் படிக்கும் 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ் மாணவர்கள்
மகாராஷ்டிராவில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களில் குறைந்தபட்சம் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் எம்பிபிஎஸ் 2ஆம் ஆண்டும், 7 பேர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டும் படித்து வந்தவர்கள் ஆகும். கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 28 மாணவர்கள் முழுமையாக 2 டோஸ் வேக்சினை எடுத்துக் கொண்டிருந்தவர்களாகும். தீவிர கொரோனா பாதிப்பால் 2 மாணவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வேக்சின்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான். இதனால் கொரோனா வேக்சினால் என்ன பயன் என்று கேள்வி எழலாம். ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படாது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்பதால் உயிரிழக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இதனால் தான் பொதுமக்கள் அனைவரும் விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பெங்களூரு பள்ளி
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்பட்டிருந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications