36,000 கிலோ மீனை.. அப்படியே பூமிக்கு கீழே போட்டு புதைத்த அரசு.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி வகையான தாய் மாங்கூர்மீன்கள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.

பார்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிச்சோலி-மஹாதுலா பகுதியில் அமைந்திருந்த 11 பண்ணைக் குளங்களில் இருந்து சுமார் 36,000 கிலோ தாய் மாங்கூர் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

Thai Mangur Fish Destroyed

கூகுள் மேப் மற்றும் ரகசிய ஆபரேஷன்

இப்பகுதியில் தடை செய்யப்பட்ட தாய் மாங்கூர் மீன்கள் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வெளிச்சந்தைகளில் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மீன்வளத்துறை உதவி ஆணையர் சுபம் கொம்ரேவார் தலைமையிலான அதிகாரிகள் குழு களத்தில் இறங்கியது.

முதலில் கூகுள் மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பகுதியில் மறைமுகமாக அமைக்கப்பட்டிருந்த குளங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. பின்னர், அதிகாரிகளே போலி வாடிக்கையாளர்களாக மாறுவேடமிட்டு சென்று அங்கு தாய் மாங்கூர் மீன்கள் விற்கப்படுவதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, 25 உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் வலைகளை வீசி 11 குளங்களில் இருந்தும் டன் கணக்கிலான மீன்கள் பிடித்து வெளியேற்றப்பட்டன. பிடிபட்ட 36 டன் மீன்களும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு மண்ணில் புதைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டன. சட்டவிரோதமாக மீன் பண்ணை நடத்திய ஷகீல் கான் அப்துல் சலாம் கான் என்பவர் மீது சட்டப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிப்பு

நாக்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாய் மாங்கூர் மீன் வளர்ப்புக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வெவ்வேறு சோதனைகள் மூலம் சுமார் 51 டன் அளவிலான மீன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. அதில், ஒரே இடத்தில் 36 டன் மீன்கள் பிடிபட்ட இந்த நடவடிக்கையே இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனையாகும்.

தாய் மாங்கூர் மீன் என்றால் என்ன? இந்தியாவில் ஏன் தடை?

தாய் மாங்கூர் என்பது வெளிநாட்டு கெளுத்தி வகையைச் சேர்ந்தது. இது எந்தவிதமான மோசமான கழிவுநீரிலும், குறைந்த ஆக்சிஜன் உள்ள சூழலிலும் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.

சுற்றுச்சூழல் சீர்கேடு: இது மாமிச உண்ணி வகையைச் சேர்ந்த மீன் ஆகும். இது நீர்நிலைகளில் உள்ள பிற நாட்டு மீன் இனங்கள், தவளைகள், பூச்சிகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது. இவை இயற்கை நீர்நிலைகளுக்குள் புகுந்தால், உள்ளூர் நாட்டு மீன் இனங்கள் அடியோடு அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

புற்றுநோய் ஆபத்து: இவ்வகை மீன்கள் அழுகிய மாமிசம், கோழிக் கழிவுகள் மற்றும் சாக்கடை நீரைக் குடித்து வளர்வதால், இவற்றின் உடலில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. மருத்துவ ஆய்வுகளின்படி, இந்த மீனைத் தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2000-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தாய் மாங்கூர் மீன்களை வளர்க்கவும் விற்கவும் முழுமையான தடை விதித்தது.

தடை இருந்தும் ஏன் திருட்டுத்தனமாக வளர்க்கப்படுகிறது?

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்பதே இந்த சட்டவிரோத வளர்ப்புக்கு முக்கிய காரணம். குறைந்த விலையிலான கழிவுகளை உணவாகக் கொடுத்தாலே சில மாதங்களிலேயே இவை பல கிலோ எடை வரை வளர்ந்து விடுகின்றன. மேலும், தண்ணீர் இல்லாத சூழலிலும் நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், சட்டவிரோத வியாபாரிகள் இவற்றை எளிதாக பிற மாநிலங்களுக்கு கடத்தி விடுகின்றனர். அதிக லாப வெறிக்காக மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய பண்ணைகள் மீது தொடர்ந்து தீவிர சோதனைகள் நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+