கிப்ட் வாங்கியதை ஒப்புக் கொண்ட ஜாக்குலின்.. சுகேஷ் மோசடி குறித்து போட்டுக் கொடுத்தாரா?
மும்பை: இடைத்தரகர் சுகேஷிடம் இருந்து பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் சுகேஷ் மீதான பணபரிமாற்ற பிடி இறுகுகிறது.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், இவர் தன்னை தொழிலதிபர் என்றும் அரசியல்வாதிகள், பெரிய அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும் கூறி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
ஆனால் இவர் ஒரு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வழக்கில் கூட அந்த சின்னத்தை பெற்றுத் தர ரூ 10 கோடி லஞ்சமாக சுகேஷ் கேட்டது தெரியவந்தது.

திகார் சிறை
இதையடுத்து இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறை சென்ற மருந்து நிறுவன அதிதாரியின் மனைவியை தொடர்பு கொண்டு அவரது கணவரை சிறையிலிருந்து எடுக்க ரூ 200 கோடி கேட்டு மோசடி செய்ததும் தெரியவந்தது. இத்தனைக்கும் சிறையிலிருந்த சுகேஷ் இந்த மோசடியை எப்படி நிகழ்த்தினார் என அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுகேஷ்
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது காதலி லீனாவின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து லீனாவும் கைது செய்யப்பட்டார். சுகேஷிற்கு நடிகை ஜாக்குலின், பதேஹி உள்ளிட்டோர் உதவியதாகவும் தெரிகிறது. இதனால் வெளிநாடு செல்லவிருந்த ஜாக்குலினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

சுகேஷை தெரியாது
இந்த விசாரணையில் தனக்கு சுகேஷை தெரியாது என்றும் அவருடன் டேட்டிங் போனதில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் சுகேஷிடம் விசாரணை நடத்திய போது பெர்சியன் பூனைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள், நகைகள், ஹேண்ட் பேக்குகள், குதிரை உள்ளிட்ட ரூ 10 கோடி பரிசுகளை ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.

ஜாக்குலின்
இதையடுத்து ஜாக்குலினின் ரூ 7.12 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த நிலையில் சுகேஷின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல்வேறு தகவல்களை விசாரணை குழுவிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் தனக்கு நிறைய பரிசுகள் தந்ததையும் அவர் விபரமாக விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

தனி விமானங்கள்
நடிகை ஜாக்குலின் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் சுகேஷ் மீதான பணப்பரிமாற்ற பிடி இறுகி உள்ளது.












Click it and Unblock the Notifications