மகளிர் ஐபிஎல்.. ஜெர்சி "நம்பர் 18" ஸ்மிருதி மந்தனாவை வாங்கிய ஆர்சிபி.. ஈ சாலா கப் நம்தே தான் போல!
ஜெர்சி நம்பர் 18 அணிந்துள்ள ஸ்மிருதி மந்தனாவையும் ஆர்சிபி அணி வாங்கியுள்ளது.
மும்பை: மகளிர் ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. இதனையடுத்து ஜெர்சி நம்பர் 18 அணிந்திருக்கும் இரு இந்திய கிரிக்கெட்டர்களான விராட் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனாவை ஆர்சிபி வாங்கிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் முதல்முறையாக மகளிா் ப்ரீமியா் லீக் போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகள் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் மகளிர் வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று தொடங்கியது. இதில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் 5 அணிகள் பங்கேற்றன.

ஸ்மிருதி மந்தனா ஏலம்
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ. 12 கோடி வரை செலவு செய்யமுடியும். இதில் முதல் வீராங்கனையாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்கிருதி மந்தனா ஏலம் விடப்பட்டார். இவரை ஏலத்தில் எடுக்க மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் என்பதால், ஸ்மிருதி மந்தனாவின் விலை கிடுகிடுவென ரூ.3 கோடியை கடந்தது.

நட்சத்திர வீராங்கனை
இறுதியாக ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி வாங்கியுள்ளது. இவர் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி, நியூசிலாந்து அணியின் சோஃபி டெவின், இந்திய அணியின் ரேணுகா சிங் மற்றும் ரிச்சா கோஷ் என்று நட்சத்திர வீராங்கனைகளை ஆர்சிபி அணி வாரி குவித்தது. அதிலும் ஸ்மிருதி, எல்லீஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரேணுகா ஆகியோர் ஒரே அணியில் விளையாடுவது ஆர்சிபி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஈ சாலா கம் நம்தே
இந்த நான்கு பேரையும் பார்க்கும் போது கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் வாட்சன் ஆகியோரை ஒற்றாக பார்ப்பது போல் இருப்பதாகவும், ஆடவர் அணி போல் இல்லாமல் மகளிர் ஆர்சிபி அணி முதல் சீசனிலேயே ஈ சாலா கப் நம்தே கனவை பலிக்க வைப்பார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்சி நம்பர் "18"
அதுமட்டுமல்லாமல் விராட் கோலியும், ஸ்மிருதி மந்தனாவும் ஒரே ஜெர்சி நம்பரை பயன்படுத்தி வருவதால், ஜெர்சி நம்பர் 18 என்றும் ஆர்சிபி அணிக்கு மட்டுமே சொந்தம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications