தோல்வி தவறில்லை.. எல்லோரும் ஒன்றாக வேண்டிய நேரம் இது! மாணவர்கள் போராட்டத்துக்கு நடுவே சச்சின் உருக்கம்
மும்பை: ''என் அப்பா பேராசிரியர். அவர் எனக்கு கற்றுக்கொடுத்தது என்னவென்றால் 'தோல்வி தவறில்லை. ஆனால் யாரையும் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளை தேர்வு செய்யக்கூடாது' என்று கூறினார். உழைப்பை விட அதற்கான ரிசல்ட்டிக்கிற்கு தான் முன்னுரிமை அளிக்கிறது. இதனால் தான் தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விட குறுக்கு வழிகள் தேடப்படுகிறது. கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். நேர்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். தகுதிக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும் வகையில் நாம் மாற்றத்தை கொண்டு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்'' என்று சச்சின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''என்னுடைய அப்பா ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருந்தார். அவர் எனக்கு தொடக்கத்திலேயே கற்றுக்கொடுத்த ஒரு பாடம் என்னவென்றால் 'தோல்வி அடைந்தால் தவறில்லை. ஆனால் யாரையும் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளை தேர்வு செய்யக்கூடாது' என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்.
இந்த சமூகத்தில் மூத்தவர்களாக உள்ள நாம் நம்முடைய கலாசாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சமூகம் என்பது உழைப்பை விட அதற்கான ரிசல்ட்டிக்கிற்கு தான் முன்னுரிமை அளிக்கிறது. இதனால் தான் தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விட குறுக்கு வழிகள் தேடப்படுகிறது. அதேபோல் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காதபோது ஏமாற்றமடைவது இயல்பானது தான். எதிர்காலத்தில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இன்றைய இந்திய இளைஞர்கள் கனவுகளும், திறமையும் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களே நமது வெற்றிக்கான உந்து சக்தியாக உள்ளனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் என அனைவரும் நமது இளைஞர்களை தொடர்ந்து ஊக்கத்துடனும், எனர்ஜியுடனும் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை கொண்டுள்ளோம்.
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். நேர்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். தகுதிக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும் ஒரு கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்துவது போலவும், அவர்களின் லட்சியங்களை பாதுகாக்கும் வகையிலும் நாம் அதற்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். அதனை கண்டறிவோம் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது.. ஜெய்ஹிந்த்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
