"ஒரு வார்த்தை சொன்னா போதும்! 200 பேர் ரெடியா இருங்காங்க.." அமிதாப் பச்சனுக்கு கோல்டி கொலை மிரட்டல்!
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கேங்ஸ்டர் கோல்டி தில்லான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி போலீசார் தனது கூட்டாளிகள் இருவரை கைது செய்தாலும், மும்பையில் அமிதாப் பச்சனை குறிவைக்கும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும் இதற்காக சுமார் 200 பேர் மும்பையில் தயார் நிலையில் இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது கடந்த மாதம் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். டைகர் ஷெராப்பை கொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். பிஷ்னோய் கும்பலே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதகாக தெரிகிறது.

மிரட்டல்
இந்த பரபரப்பு இன்னும் முடியாத நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கேங்ஸ்டர் கோல்டி தில்லான் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் சரி, குண்டு துளைக்காத கண்ணாடி அமைத்திருந்தாலும் சரி நிச்சயம் துப்பாக்கியால் சுடுவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் கைது
சமீபத்தில் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்த சதி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விகாஸ் தாக்கூர், தீபக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் திட்டத்திலும், அமிதாப் பச்சனை குறிவைக்கும் சதியிலும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் வேலை விகாஸ் தாக்கூருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்றுள்ளார். தீபக் சிங் அவருடன் இணைய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் கூறியுள்ளனர்.. தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
200 பேர் ரெடியா இருக்காங்க
இந்த சூழலில் தான் கோல்டி தில்லான் தனது சமூக வலைத்தள பக்கம் மூலம் அமிதாப் பச்சனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தனது கூட்டாளிகள் இருவரை போலீஸ் கைது செய்தாலும் கூட, அமிதாப் பச்சன் மீது துப்பாக்கி சூடு நடத்த சுமார் 200 பேர் மும்பையில் ரெடியாக இருப்பதாக அதில் கூறியுள்ளார். 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு, அந்த வன்முறைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் சீக்கிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அமிதாப், அபிஷேக் இருவரது பெயரையும் குறிப்பிட்டு. அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளது.
அமிதாப் பச்சன்
மும்பையில் வசித்து வரும் அமிதாப் பச்சன் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வகையில் மூன்று மெயில்கள் வந்துள்ளன. இதையடுத்து அவரது வீட்டை சுற்றியுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீட்டுக்கு வெளியே திரளும் ரசிகர்களை அமிதாப் பச்சன் சந்திப்பது வழக்கம். ஆனால், நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு, குண்டு துளைக்காத கண்ணாடி அமைத்து அதில் இருந்தபடி தான் அமிதாப் பச்சன் தனது ரசிகர்களை சந்திக்கிறார்.




Click it and Unblock the Notifications
