இறந்தவரை உயிருடன் கொண்டுவர முயற்சி.. மும்பையில் உடலை 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்த குடும்பம்
மும்பை: ஒரு முழு மனித உடலையோ அல்லது மூளையையோ உறைநிலையிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்து உயிர் கொடுக்க இன்றைய நவீன மருத்துவத்தால் முடியவே முடியாது. ஆனால் அறிவியல் பூர்வமாக எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் பெயரில் மும்பையில் முதியவரின் உடலை அவர்களது குடும்பத்தினர் 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இறந்தவர்களை உயிர்பெற வைக்கும் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் சாத்தியமா
இன்று மட்டும் இறந்தவர்களை உயிர்பெற வைக்கும் தொழில் நுட்பம் இருந்தால், உலகில் சாவு என்பதே வராது.. ஆனால் அப்படியான தொழில்நுட்பம் இல்லவே இல்லை.. எதிர்காலத்தில் எதை கண்டுபிடித்தாலும், உயிரை மீட்டெடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை.. அதற்கான காரணங்களை விவரமாக பார்ப்போம்.

இன்றைய நவீன அறிவியலின் படி, 'கிரியோபிரீசர்வேஷன்' என்ற முறை மூலம் மனித உடலின் செல்கள், திசுக்கள், விந்தணுக்கள், கருமுட்டைகள் மற்றும் சில சிறிய உறுப்புகளை உறைய வைத்து வெற்றிகரமாகப் பாதுகாக்க முடியும். ஆனால், ஒரு முழு மனித உடலையோ அல்லது மூளையையோ உறைநிலையிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்து உயிர் கொடுக்க இன்றைய நவீன மருத்துவத்தால் முடியவே முடியாது.
அறிவியல் பூர்வமாக எதிர்காலத்தில் இது சாத்தியமா என்றால், அதற்கும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாக கூறுகிறார்கள். ஏனெனில் இறந்த உடலை உறை நிலைக்குக் கொண்டு செல்லும்போது ரத்தம் மற்றும் திசுக்களில் உள்ள நீர் படிகங்களாக மாறும்.. அப்படியே செல்கள் கிழிந்து சேதமடைந்து விடும்.
அதேபோல் ஒருவர் உயிரிழந்த பிறகு சில நிமிடங்களிலேயே மூளைச் செல்கள் இறக்கத் தொடங்கிவிடும். உறை நிலையில் வைத்திருந்தாலும் மூளையில் உள்ள நினைவுகள், நரம்பு மண்டலத் தொடர்புகள் அழியாமல் மீண்டும் மீட்டெடுக்கப்படுமா என்பது பெரும் கேள்விக்குறிதான்.
நானோ தொழில்நுட்பம் , செயற்கை நுண்ணறிவு , மரபியல் மருத்துவத் துறை ஆகியவற்றின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் ஒருவேளை இது சாத்தியப்படலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதயச் செயலிழப்பு, புற்றுநோய் அல்லது முதுமையால் இறந்த ஒருவரது நோயைக் குணப்படுத்தி, அனைத்து உறுப்புகளையும் மீண்டும் ஒரே நேரத்தில் இயங்க வைப்பது கிட்டத்தட்ட நடைமுறையில் சாத்தியமே இல்லாதது மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். எனினும் சிலர், எதிர்காலத்தில் உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம் சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையில் இறந்த உடல்களை பதப்படுத்தி வைக்கிறார்கள். அப்படி தான் மும்பையில் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை மலாடு பகுதியில் சமீபத்தில் மூடப்பட்ட மருத்துவமனை ஒன்றில் முதியவரின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 28-ந்தேதி இரவு குரார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு பிரீசர் பெட்டியில் 80 வயது முதியவரின் உடல் இருந்ததை கண்டறிந்துள்ளார்கள்.
இதையடுத்து அந்த முதியவரின் குடும்பத்தினரை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அந்த குடும்பத்தினர் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், உயிரிழந்த முதியவருக்கு வயதான மனைவி மற்றும்2 பிள்ளைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் ஒரு மகள் வழக்கறிஞராக இருக்கிறார். பிரீசர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்து உள்ளார். புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை மரணம் அடைந்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் அவர் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். இதனால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு கிடக்கும் மருத்துவமனையில் உடலை பாதுகாத்து வந்துள்ளனர்.
லேசான துர்நாற்றம் கூட வராத அளவுக்கு உடல் பதப்படுத்தப்படுத்தி உள்ளனர். இதற்காக இதுவரை ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளார்களாம். எதிர்காலத்தில் உயிரை மீட்டெடுக்கும் அறிவியல் வரும்பட்சத்தில், முதியவரின் உயிரை மீட்டெடுக்கும் முயற்சிக்காக இந்த விசித்திரமான செயலை செய்துள்ளனர். இதற்காக உடலை பதப்படுத்த அமெரிக்காவில் உள்ள 'கிரியோபிரீசர்வேஷன்' சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். 'கிரியோபிரீசர்வேஷன்' என்பது செல்கள், திசுக்கள், உயிரணுக்களை பாதுகாக்கும் மையமாகும். இதுபோன்ற மையத்தில் உடலை எவ்வளவு காலம் முடியுமோ, அதுநாள் வரை பாதுகாக்க விரும்புவதாக குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினார்கள்.
குடும்பத்தினர் விருப்பப்படி உடலை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல வழிமுறைகள் உள்ளதா? அல்லது இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினரை அறிவுறுத்துவதா? என்பது பற்றி போலீசார் ஆலோசித்து நடத்தி வருகிறார்கள். முதியவரின் உயிரிழப்பு இயற்கை மரணம் தான் என்பதை ஆவணங்கள் மூலம் போலீசாருக்கு குடும்பத்தினர் தெரிவித்தனர். எனினும் குடும்பத்தினரின் இந்த செயலுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications
