தொடரும் சொதப்பல்.. கைகூடாத ஒருநாள் கிரிக்கெட்.. சூர்யகுமார் யாதவிற்கு இதுவே கடைசி வாய்ப்பு!
ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்பும், சூர்யகுமார் யாதவிற்கு ஆஸி.க்கு எதிரான தொடரே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மும்பை: உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவிற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை.
இதனால் இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஆஸ்திரேலியா கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் சூழலில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
அதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவரது இடத்தில் இந்திய அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை களமிறக்க உள்ளது. இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் சூர்யகுமார் யாதவிற்கு, இதுவரை ஒருநாள் கிரிக்கெட் மட்டும் கைகூடவே இல்லை. பெயர் சொல்லும்படியான இன்னிங்ஸை ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் இதுவரை ஆடவில்லை.

2 அரைசதங்கள்
இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள சூர்யகுமார் யாதவ், இதுவரை வெறும் 2 அரைசதம் மட்டுமே விளாசி இருக்கிறார். இதன் காரணமாக சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதல் சாய்ஸ் வீரராக தேர்வு செய்யப்படுவதில்லை. இதுவரை பேக் அப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இவரை ஃபார்மிற்கு கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் ஏராளமான வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறது.

டி20 அணுகுமுறை
என்னதான் டி20 கிரிக்கெட்டில் அசாத்தியமான திறமைகளை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு வேறு மனநிலையில் வேறு அணுகுமுறையோடு விளையாட வேண்டும். அதனை சூர்யகுமார் யாதவ் தவறவிடுகிறார். டி20 கிரிக்கெட் அணுகுமுறையுடனே ஒருநாள் கிரிக்கெட்டையும் அணுகுவதால், எளிதாக விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார்.

கடைசி வாய்ப்பு
ஏற்கனவே மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித்தும் இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். போதுமான வாய்ப்புகளை கொடுக்காமலேயே, சஞ்சு சாம்சன் மற்ற வீரர்களுக்காக வெளியேற்றப்படுகிறார். இவர் அணியில் இல்லாததால், சூர்யகுமார் யாதவிற்கு எளிதாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அந்த வாய்ப்பை சூர்யகுமார் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரே, அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications