வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் ஒரு தேர்தலில் கூட வெல்ல முடியாது! ராகுல் காந்தி தாக்கு
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் போனால் வெல்லவே முடியாது எனச் சாடியுள்ளார்.
கடந்தாண்டு ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார். அதற்கு நாடு முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் இது உற்சாகத்தைக் கொடுத்தது.

அந்த யாத்திரைக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ராகுல் காந்தி இப்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தி வருகிறார். மணிப்பூரில் ஆரம்பித்த இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக மகாராஷ்டிரா வந்தடைந்தது.
பாத யாத்திரை: இந்த பாத யாத்திரையின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த நிறைவு விழா கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்தும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பெருந்திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மேலும், பொது மக்களின் பிரச்சினைகளைச் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் லோக்சபா தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று கூறிய ராகுல் காந்தி, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைப் பிரதமர் மோடி தனது அரசியல் ஆதாரத்திற்குப் பயன்படுத்துவதாகச் சாடியுள்ளார்.
ராகுல் காந்தி: இது குறித்து ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தை எங்கள் வல்லுநர்களிடம் காட்டுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். இருப்பினும், அவர்கள் அதை மறுத்துவிட்டனர்.
அவர்களிடம் ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு எதிராகத் தான் நாங்கள் போராடுகிறோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை தான் அது. மகாராஷ்டிராவில் இருந்த சேர்ந்த பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் இங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் எனது தாய் சோனியா காந்தியை அழைத்துப் புலம்பினார்கள்.
தாங்கள் வெட்கப்படுவதாகச் சோனியா காந்தி சொன்னார்கள். என்னால் அவர்களுடன் சண்டையிட முடியாது, சிறைக்கும் செல்ல முடியாது. இப்படிச் சொல்லிவிட்டுத் தான் அவர்கள் பாஜகவில் ஐக்கியமாகினார்கள். இதைப் போலவே சிவசேனா மற்றும் என்சிபி கட்சியைச் சேர்ந்த பலரும் அச்சுறுத்தல் காரணமாகவே பாஜகவில் இணைந்துள்ளனர்" என்று அவர் சரமாரியாகச் சாடினார்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications