பிரபல வழக்கறிஞரை வேட்பாளராக களமிறக்கிய பாஜக.. யார் இந்த உஜ்வல் நிகம்? மும்பை 26/11 அட்டாக் பின்னணி!
மும்பை: மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் மும்பை வடக்கு மத்திய லோக்சபா தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் உஜ்வல் நிகம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு வழக்கறிஞராகச் செயல்பட்டவர்.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக 5 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 20ஆம் தேதி வரை இன்னும் 3 கட்டங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை வடக்கு மத்திய லோக்சபா தொகுதிக்கான பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த வழக்கறிஞர் உஜ்வல் நிகமை மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
மும்பை வடக்கு மத்திய லோக்சபா தொகுதியில் தற்போதைய எம்.பியாக இருந்து வருகிறார் பூனம் மகாஜன். பூனம் மகாஜன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் இருந்து எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வரும் தேர்தலில் பூனம் மகாஜனுக்கு பதிலாக உஜ்வல் நிகம் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
உஜ்வல் நிகம், பிரபலமான வழக்கறிஞராக இருந்து வருகிறார். 2008 நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டவர் உஜ்வல் நிகம். பூனம் மகாஜனின் தந்தை பிரமோத் மகாஜனின் கொலை வழக்கிலும் உஜ்வல் நிகம் வழக்கறிஞராக செயல்பட்டார். குல்ஷன் குமார் கொலை வழக்கு, 1993 மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குககளில் வழக்கறிஞராக இருந்துள்ளார் உஜ்வல் நிகம். 2013 மும்பை கூட்டு பலாத்கார வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருந்தார்.
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு, உஜ்வல் நிகம், இது இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும், அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைத்து போலீஸ்காரர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு இந்தியா அஞ்சலி செலுத்தியது என்றும் கூறினார். உஜ்வல் நிகம் கடந்த 2016 இல் பத்மஸ்ரீ விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மும்பை மத்திய வடக்கு தொகுதி வேட்பாளர் ரேஸில் பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் ஆகியோர் இருந்த நிலையில், உஜ்வல் நிகமுக்கு சீட் கொடுத்துள்ளது பாஜக. மும்பை வடக்கு மத்திய லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மும்பை நகர காங்கிரஸ் கட்சி தலைவரும், தாராவி எம்எல்ஏவுமான வர்ஷா கெய்க்வாட் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications