5 மாநில சட்டசபை தேர்தல்... பாஜக படுதோல்வி அடைவது நிச்சயம்... போட்டு தாக்கும் சரத் பவார்
மும்பை: ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்க பாஜக கடுமையாக முயல்கிறது. அசாம் மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்கிறது.

சரியான முடிவை எடுப்பார்கள்
இந்நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் பரமதி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து மாநில தேர்தல்களில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

கேரளா, தமிழ்நாடு
தொடர்ந்து சட்டசபை தேர்தல் குறித்துப் பேசிய அவர், "கேரளாவைப் பொருத்தவரை, அங்கு இடதுசாரிகளும் நாங்களும் கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு எங்களுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தமிழ்நாட்டில் மக்கள் திமுகவையே ஆதரிக்கின்றனர். அக்கட்சியே தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்" என்றார்.

மேற்கு வங்கம், அசாம்
மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களுக்காகப் போராடும் மம்தா பானர்ஜியை தாக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், மக்கள் ஆதரவுடன் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அசாம் மாநிலத்தின் நிலைமை தனக்குத் தெரியும் என்றும், அங்கு மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் பாஜக நல்ல நிலையில் உள்ளது என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

படுதோல்வி அடையும்
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும். அங்கு மற்ற அரசியல் கட்சிகளே ஆட்சிக்கு வரும். இது நாட்டை புதிய பாதையில் பயணிக்க வைக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கும் என நம்புகிறேன் " என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications