மத்திய பாஜக அரசுக்கு அடுத்த ஷாக்! போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால்.. CJP எடுத்த முக்கிய முடிவு
மும்பை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, மும்பை சிவாஜி பார்க்கில் போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று CJP தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார்.
ஞானேஷ் குமார் பதவி விலக CJP 2 நாட்கள் அவசாகத்தை கொடுத்திருந்தது. ஆனால், கால அவகாசம் முடிந்த பின்னரும் அவர் பதவி விலகவில்லை. எனவேதான் இந்த அமைப்பு போராட்டத்திற்கு திட்டமிட்டிருக்கிறது.

என்ன பஞ்சாயத்து?
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 3 ஆணையர்கள். ஒருவர் தலைமை ஆணையர். அவர்தான் ஞானேஷ் குமார். இவருக்கு 2 ஆணையர்கள் இருப்பார்கள். ஒருவர் பெயர் விவேக் ஜோஷி, இன்னொருவர் சுக்பீர் சிங் சாந்து. என்னதான் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் இருந்தாலும் கூட, முக்கிய முடிவுகள் 3 ஆணையர்களும் சேர்ந்துதான் எடுப்பார்கள்.
ஆனால் SIR விஷயத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் அனைத்தும் ஞானேஷ் குமாரால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், நாங்கள் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும் எங்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை எனவும் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியிருந்தது. இதுதான் பஞ்சாயத்து.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்
ஏற்கெனவே SIR நடவடிக்கையில் பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என்று எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்திய பாஜக அரசின் மீதும் கடுப்பில் இருக்கின்றன. இந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகியிருந்த செய்தி, நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மற்ற ஆணையர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியிருக்கின்றன.
அனுமதி மறுப்பு
CJP அமைப்பும் இதே கோரிக்கையை வலியுத்தியிருந்தது. ஏற்கெனவே மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை பதவி விலக வைக்க கோரி இந்த அமைப்பு நடத்தியிருந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. கடைசியில் வேறு வழியின்றி பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது, ஞானேஷ் குமார் பதவி விலக 2 நாட்கள் அவகாசரத்தை கொடுத்திருந்தது. அவகாசம் முடிந்தும், ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை. எனவே மும்பை சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், அம்மாநில பாஜக அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
சிறை நிரப்பும் போராட்டம்
இது CJP அமைப்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை எனில், நாங்கள் அக்.2 அன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்று CJP அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு தற்போது மகாராஷ்டிரா அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.



Click it and Unblock the Notifications
