மகாராஷ்டிரா தேர்தல்: 3வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.. இதுவரை 87 வேட்பாளர்களை அறிவித்த காங்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது வரை 87 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) தொடங்கியது. வரும் அக்டோபர் 29 வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டனர். அதன்படி, காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 தொகுதிகள் அந்தந்தக் கட்சி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலுடன் இதுவரை 87 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலில் 48 பேரின் பெயர்களை வெளியிட்டிருந்தது. தற்போது இரண்டாவது பட்டியலில் 23 பேரை அறிவித்திருந்தது. தற்போது 3வது பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி இதுவரை 87 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராணா தலிப்குமார் சனாடா, கம்கான் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஹேமந்த் நந்தா சிமோட் மேல்காட் தொகுதியில் போட்டியிடுகிறார். மனோகர் துல்ஷிராம் போரேட்டி கட்சிரோலி தொகுதி வேட்பாளராகவும், மாணிக்ராவ் தாகரே டிக்ராஸ் தொகுதி வேட்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிவாண்டி மேற்கு தொகுதியில் தயானந்த் மோதிராம் சோராகேவும், அந்தேரி மேற்கு தொகுதியில் சச்சின் சாவந்தும், மோகன்ராவ் மரோத்ராவ் அம்பாடே நான்டெட் தெற்கு தொகுதி, ஆசிப் ஜகாரியா - வாந்த்ரே மேற்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவை பொறுத்தவரை கடந்த வாரம் 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 22 பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications