"டவர் ஆப் சைலன்ஸ்.." சைரஸ் மிஸ்ட்ரி உடலை கழுகுகளுக்கு இரையாக்கவில்லை.. இந்து முறைப்படி தகனம்
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பார்சி சமூகத்தை சேர்ந்த சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் ‛‛டவர் ஆப் சைலன்ஸ்'' மூலம் கழுகுகளுக்கு இரையாக்கப்படாமல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்ட்ரி. இவர் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஒரு அங்கமான ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியின் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வந்தார்.
54 வயது நிரம்பிய சைரஸ் மிஸ்ட்ரி நேற்று முன்தினம் 3 பேருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.

சைரஸ் மிஸ்ட்ரி மரணம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே பல்கர் எனும் இடத்தில் சூரிய நதி பாலத்தில் கார் சென்றது. அப்போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைக்காயம் ஏற்பட்டு அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் ஜஹாங்கிர் தின்ஷா பண்டோல் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். காரின் பின்இருக்கையில் இருந்த இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும், அது இறப்புக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

2 பேர் சிகிச்சை
இந்த விபத்தில் கார் ஓட்டிய அனாஹிதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டாரியஸ் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 2 பேரையும் முன்னிருக்கையில் இருந்தவர்களை ஏர்பேக் காப்பற்றியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து முறைப்படி தகனம்
இந்நிலையில் இன்று சைரஸ் மிஸ்ட்ரியின் உடல் மும்பையில் வொர்லியில் உள்ள வித்யுதஹினில் தகனம் செய்யப்பட்டது. இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இவர் பார்சி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த நடைமுறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பார்சி சமூகத்தில் இறந்தவரின் உடல்கள் தகனம் அல்லது புதைப்பது கிடையாது. மாறாக உடல் ‛டவர் ஆப் சைலன்ஸ்' எனும் அமைதி கோபுரத்தில் வைக்கப்படும். அங்கு கழுகுகள் பிணத்தை தின்னும்.

மலபார் மலையில் உள்ள டவர் ஆப் சைலன்ஸ்
பொதுவாக மும்பையில் பார்சி சமூகத்தினர் இறந்தால் மலபார் மலைக்கு அருகே 'டவர் ஆப் சைலன்ஸ்' எனும் இடம் உள்ளது. இது மரங்கள் சூழ இரும்பு கதவு கொண்டது. இறந்தவர்களின் உடல் இங்கு சூரிய ஒளி படும்படி வைக்கப்படும். இந்த வேளையில் கழுகுகள் உள்பட பிற பறவைகள் உடல்களை உணவாக உட்கொள்ளும். இன்றும் கூட பல பார்சி குடும்பங்கள் இந்த முறையை பின்பற்றி வருகின்றன. ஆனால் சைரஸ் மிஸ்ட்ரியின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.

காரணம் என்ன?
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பல சமூகங்களின் இறுதி சடங்குகள் மாற்றமடைந்தன. இதற்கு பார்சி சமூகமும் விதிவிலக்கல்ல. கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பது கட்டாயமாக்கப்பட்ட சமயத்தில் பார்சி சமூகத்தினருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அப்போது பார்சி சமூகத்தை சேர்ந்தவர்களின் இறுதிச்சடங்கு முறை மாற்றமடைந்தது. மேலும் ஒரு காலத்தில் மும்பையில் கழுகுகள் அதிகம் இருந்தன. இதனால் ‛டவர் ஆப் சைலன்ஸ்' எனும் அமைதி கோபுரத்தில் உடல்கள் வைத்தால் கழுகுகள் உள்பட பிற பறவைகள் இணைந்து உடல்களை தின்றுவிடும். ஆனால் தற்போது கழுகுகள் உட்பட பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் உடல் சிதைவதற்கு காலம் அதிகரிக்கும். இதனை தவிர்க்கவே சைரஸ் மிஸ்ட்ரியின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications