Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடா? ராகுல் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் தந்த முக்கிய பதில்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கட்டுரையில் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் தான் பாஜக வென்றதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக ராகுல் காந்தி ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி வைத்தார். தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழு அமைத்தல்..மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தது, வாக்குப்பதிவை அதிகரித்தது, பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை சேர்க்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

மேலும் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்பதற்காக ‛மேட்ச் பிக்சிங்' நடந்ததாகவும், பீகார் சட்டசபை தேர்தலிலும் இது தொடரும் எனவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் நியமனம்

அதன்படி தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛2023ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டபோது, அப்போதைய மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்வது தவறு. மேலும், இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று எத்தனை கமிஷன்கள் அமைக்கப்பட்டன என்கிற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

வாக்காளர்கள் நீக்கம் ஏன்?

அதேபோல் 4.1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இதற்கு தேவேந்திர பட்னாவிஸ், ‛‛4.1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது உண்மைதான். அதே நேரத்தில் 18 வயது நிரம்பிய 2.6 கோடி இளைஞர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதற்கு முன்பு 2004-09 காலகட்டத்தில் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு என்பது 10% ஆகவும், 2009-14 காலகட்டத்தில் 7.5% ஆகவும், 2014-19 காலகட்டத்தில் 6.3% ஆகவும் இருந்தது. எனவே, இந்த எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் தவறாக செயல்படுகிறது என்று சொல்வது சரியல்ல’’ என்று கூறியுள்ளார்.

5 மணிக்கு மேலான வாக்குப்பதிவு

5 மணிக்கு மேல் 7.8% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது முறைகேடு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். இதற்கு தேவேந்திர பட்னாவிஸ், ‛‛5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், அது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.

12,000 பூத்களில்..

12,000 வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தன. குறிப்பாக கம்டிதொகுதியை உதாரணமாக எடுத்து கொள்ளலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ், ‛‛கம்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது உண்மைதான். ஆனாலும் முந்தைய தேர்தல்களில் பதிவான வாக்குகளை வைத்து பார்க்கும்போது இது வழக்கமான அதிகரிப்புதான். அரசின் திட்டங்கள் மற்றும் பிற காரணங்களாலும் அதிக வாக்குகள் பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

தேர்தல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸ், ‛‛தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் தேர்தல் நியாயமாகவே நடந்தது என்பது உறுதியாகி உள்ளது. ஒரு சில இடங்களில் புகார்கள் வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 2024 தேர்தலில் இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ‛‛ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று தேவேந்திர பட்னாவிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+