மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் இன்று பரப்புரைகள் நிறைவு! நாளை மறுநாள் தேர்தல்!
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை மறுநாள் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. எனவே, இரு மாநிலங்களிலும் இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.
தேசிய அரசியலில் மகாராஷ்டிரா மாநிலம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. இங்கு சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியான, 'மகாயுதி' ஆட்சியில் இருக்கிறது. ஏற்கெனவே இம்மாநிலத்தில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோர் அடங்கிய 'மகா விகாஸ் அகாடி' ஆட்சியில் இருந்தது. ஆனால் ஷிண்டே தரப்பில் சில எம்எல்ஏக்கள் பிரிந்ததால்தான், ஆட்சியும் கவிழ்ந்தது.

எனவே, இந்த முறை யார் ஆட்சியை கைப்பற்றப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்த அளவில் வணிகர்களும், விவசாயிகளும் அதிகம் இருப்பதால் ஜிஎஸ்எஸ்டி தொடங்கி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவகாரம் வரை தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருபுறம் உரம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் குறைந்தபட்ச ஆதார விலை கொஞ்சம் கூட உயராமல் இருப்பது ஏமாற்றமாளிப்பதாக விவசாயிள் கவலை தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் பணமதிப்பிழப்பு, அரசு பணிகள், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நகர்ப்புற மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவை அனைத்தையும் மையப்படுத்தி மகா விகாஸ் அகாடி கூட்டணி பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது. அதேபோல புதிய வாக்குறுதிகளை வழங்கி பாஜக களமிறங்கியுள்ளது. இப்படியாக இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்றுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்றன. ஏற்கெனவே சில தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டிருந்த நிலையில், இன்று சந்தால் மற்றும் கோயலாஞ்சல் பகுதிகளில் உள்ள 38 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கோடா, தும்கா, தியோகர் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் பரப்புரை மேற்கொள்கிறார்.
பாஜக சார்பில் பரப்புரைக்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். சாஹேப்கஞ்ச், ஜம்தாரா, தியோகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று யோகி பரப்புரை மேற்கொள்கிறார். இந்த இரு மாநிலங்களிலும் கடந்த காலங்களில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால், இங்கு யார் வெற்றிப்பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications