மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு மரண அடி- 12 எம்எல்ஏக்களுடன் மாஜி சிஎம் அசோக் சவாண் பாஜகவுக்கு ஓட்டம்!
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும் மரண அடி கிடைத்துள்ளது. அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்களுடன் அசோக் சவாண் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முதலில் உடைக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தனி அணியாக பாஜகவுக்கு ஆதரவளித்தனர். தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் ஏக்நாத் ஷிண்டேதான் உண்மையான சிவசேனா என தீர்ப்பளித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைக்கப்பட்டது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவை ஆதரித்தது. தேர்தல் ஆணையமும் அஜித் பவார்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தீர்ப்பளித்தது.

12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தாவல்?: தற்போது மகாரஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவாண், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் நிற்காமல், 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் இழுத்துக் கொண்டு பாஜகவுக்கு அசோக் சவாண் தாவ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் வருவார்களே.. : இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். எங்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றார்.
3-வது காங்கிரஸ் தலைவர்: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி பாஜக பக்கம் ஓடி செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் காங்கிரஸில் இருந்து விலகும் 3-வது மூத்த தலைவர் அசோக் சவாண். இதற்கு முன்னர் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகிய தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேறி இருந்தனர்.
யார் இந்த அசோக் சவாண்: முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்பி சவாணின் மகன் அசோக் சவாண். 1999-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் அமைந்த காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராகப் பணியாற்றியவர். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற போது முதல்வர் பதவியில் இருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வராக அசோக் சவாண் பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற, 2-வது முறையாக அம்மாநில முதல்வரானார் அசோக் சவாண். ஆனால் மகாராஷ்டிராவை உலுக்கிய ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் முறைகேடு புகார்கள் காரணமாக அசோக் சவாண் அடுத்த ஆண்டே அதாவது 2010-ம் ஆண்டே தமது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் காங். பலம்: மகாராஷ்டிராவில் தற்போது பாஜக- ஏக்நாத் ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 தேர்தலில் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி மொத்தம் 44 இடங்களில் வென்றது. தற்போது அசோக் சவாணுடன் இணைந்து 12 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினால் காங்கிரஸின் பலம் 32 ஆக குறையும்.












Click it and Unblock the Notifications