"பச்சையாக மாறிய மூளை!" பிரியாணி + தர்பூசணி மரணங்களால் அதல பாதாளத்திற்கு சரிந்த விற்பனை! என்ன நடந்தது
மும்பை: மும்பையின் பெண்டி பஜார் பகுதியில் பிரியாணி, அதைத் தொடர்ந்து தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது தனது முதற்கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் உயிரிழப்பிற்கு தர்பூசணி காரணமில்லை எனச் சொல்லப்பட்டுள்ள போதிலும், அச்சத்தால் தர்பூசணி விலை குறைய ஆரம்பித்துள்ளது.
மும்பையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு விருந்து கொடுத்துள்ளனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்ட நிலையில், இரவு உணவுக்குப் பிறகு உறவினர்கள் கிளம்பிவிட்டனர். இருப்பினும், நள்ளிரவில் குடும்பத்தினர் மட்டும் தர்பூசணியை சாப்பிட்டுள்ளனர். அதுவே பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.

தர்பூசணி
தர்பூசணி சாப்பிட்ட அப்துல்லா (40), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஜைனப் (13), ஆயிஷா (16) ஆகிய நால்வரும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரியாணி சாப்பிட்டவர்கள் நலமுடன் இருக்கும் சூழலில், அதிகாரிகள் பார்வை தர்பூசணியில் திரும்பியது. இவர்களின் மரணத்திற்குத் தர்பூசணியில் கலக்கப்பட்ட சாயமோ அல்லது ரசாயனமோ காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குடும்பத்தினர் சாப்பிட்ட தர்பூசணி மாதிரிகளைப் பரிசோதனை செய்தனர்.
முதற்கட்ட முடிவுகள்
அதன் முதற்கட்ட முடிவுகள் இப்போது வந்துள்ளது. அதில் தர்பூசணியில் செயற்கை இனிப்புகளோ, ரசாயனங்களோ அல்லது செயற்கை நிறமூட்டிகளோ சேர்க்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், தர்பூசணி மாதிரிகள் சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து எடுக்கப்பட்டதால், அதில் பூஞ்சை வளர்ந்துவிட்டது. இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்ததா என்பதை ஆய்வு செய்ய முடியவில்லை என எஃப்.டி.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீரின் மாதிரிகள் தெளிவற்ற முடிவுகளைத் தந்துள்ளன.. பேரீச்சம்பழ மாதிரிகள் சோதனை செய்யப் போதுமான அளவில் இல்லை. தற்போது பிரியாணியில் பயன்படுத்தப்பட்ட இறைச்சி மாதிரிகள் பி.எம்.சி ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
பச்சை கலர்
அதேநேரம் முதற்கட்ட ஆய்வில் தர்பூசணியில் பிரச்சனை இல்லை.. அதில் எந்தவொரு கெமிக்கலும் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனையில் உயிரிழந்தோரின் மூளை, இதயம், குடல் உள்ளிட்ட சில பாகங்கள் பச்சை கலரில் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது. சாதாரண புட் பாய்சனிங்கில் இதுபோல ஆகாது. எனவே, வேறு ஏதோ மர்மம் இதில் நீடிக்கிறது.
விலை தாறுமாறாக சரிவு
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் தர்பூசணி விற்பனை முற்றிலுமாக நின்றுவிட்டது. நவி மும்பை சந்தையில் தர்பூசணியின் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. வழக்கமாக மொத்த விற்பனை சந்தையில் கிலோ 10 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படும் தர்பூசணி, தற்போது 5 முதல் 7 ரூபாய் வரை சரிந்துள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த குறிப்பிட்ட குடும்பத்தைத் தவிர, தர்பூசணி சாப்பிட்டு வேறு யாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் போதிலும் தர்பூசணி விலை குறைந்துள்ளது வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்டீரியா தொற்று?
கலப்படம் இல்லை என்பது ஓரளவு நிம்மதி அளித்தாலும், பாக்டீரியா தொற்றை உறுதி செய்ய முடியாதது மர்மத்தை நீடிக்கச் செய்துள்ளது. கோடைக் காலத்தில் பழங்களைச் சாப்பிடும்போது அவை முறையாகச் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், நீண்ட நேரம் வெட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்ட பழங்களைத் தவிர்ப்பதையும் மக்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications