அதானி பிறந்தநாளில் 27,661 யூனிட் ரத்த தானம்.. 22 மாநிலம் - 2 யூனியன் பிரதேச முகாம்களில் சாதனை
மும்பை: நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அதானி அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 27,661 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு 83,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபராக கவுதம் அதானி இருக்கிறார். இவரது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கவுதம் அதானியின் 63வது பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதானி குழுமத்தின் சமூக நலன் மற்றும் மேம்பாட்டு பிரிவான அதானி அறக்கட்டளை சார்பில் ஜூன் 24ம் தேதி நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடந்தது.
இந்த இரத்த தான முகாம் ரெட் கிராஸ் இரத்த வங்கிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. அதானி குழுமத்தைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தரவு ஆபரேட்டர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் இந்த முகாமிற்கு ஆதரவு அளித்தனர். மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 206 நகரங்களில் ரத்த தான முகாம் நடந்தது.
அதானி ஹெல்த்கேர் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் அதானி குழும ஊழியர்கள் உள்பட மற்றவர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சுமார் 11,100 லிட்டர் அளவிலான 27,661 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த தானத்தின் மூலம் 83,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள். கடந்த ஆண்டு மொத்தம் 25,282 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதனை விட அதிகமாக ரத்த தானம் பெறப்பட்டுள்ளது.
அதானி அறக்கட்டளையின் தலைவரான டாக்டர். ப்ரீத்தி அதானி கூறுகையில், "இந்த சேவையில் முன்வந்து பங்களித்த அதானி குழுமத்தின் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களின் இந்த தாராள குணம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும்" என்றார். அதேபோல் இந்தியா தவிர முதல் முறையாக இந்த ரத்த தான முகாம் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டது. கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் (CWIT) போர்ட், கொழும்பு மற்றும் டார்-எஸ்-சலாம் துறைமுகம், தான்சானியா ஆகிய இடங்களிலும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 100க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.
அதானியின் பிறந்தநாளை முன்னிட்டு 2011 ஆம் ஆண்டு முதல் இந்த ரத்த தான முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. "சேவையே சாதனை" என்ற அதானியின் தத்துவத்தை பின்பற்றி இந்த ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதானி குழுமத்தின் இந்த லாப நோக்கமற்ற பிரிவு, அனைத்து சமூகங்களுக்கும் சமமான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. ஒட்டுமொத்த நாடு மற்றும் மக்களின் நிலையான வளர்ச்சிக்கு அதானி குழுமம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அதானி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications