Honda Elevate: ஹோண்டா புது கார் எப்படி இருக்கு? கிரெட்டா, செல்டாஸ், குஷாக்குடன் மோத முடியுமா?
மும்பை: ஹோண்டா எலவேட் மிட் சைஸ் எஸ்யூவி இன்று அறிமுகம் (Honda Elevate Launch) செய்யப்பட்டுள்ளது. இந்திய கார் மார்க்கெட்டில், நீண்ட கால கனெக்ட்டிவிட்டி உள்ள பிராண்ட் ஹோண்டா. ஹோண்டா சிட்டி கார் இன்றும் டாக்டர்கள் உள்ளிட்ட ப்ரபஷனல் தொழில் செய்வோரின் முதல் தேர்வாக உள்ளது.
நீண்ட காலம் எந்த தொல்லையும் தராமல் உழைக்கும் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின், ஹோண்டா வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ஹோண்டா விரும்பிகள் அதன் டீசல் இன்ஜினை எப்போதும் விரும்பியது இல்லை. டீசல் கார்களுக்கு தேவை அதிகமாக இருந்த காலகட்டத்திலும் விவரம் அறிந்தவர்கள் ஹோண்டா பிராண்ட்டில் பெட்ரோல் வேரியண்ட்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதன் ஓட்டும் திறனாலும், சத்தம் போடாமல், வைப்ரேஷன் உருவாக்காமல் இயங்கும் திறனாலும் ஐவிடெக் இன்ஜின்களுக்கு தனி ஃபேன் பேஸ் உள்ளது.

இந்த நிலையில்தான், ஹோண்டா எலவேட் என்ற பெயரிலான மிட் சைஸ் எஸ்யூவி காரை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் இதற்கான புக்கிங் ஆரம்பிக்கும். வருட இறுதியான பண்டிகை காலத்தில் ஷோரூம்களுக்கு இந்த எஸ்யூவி வரும். ஹோண்டா நிறுவனத்தின் முந்தைய மிட் சைஸ் எஸ்யூவி honda wrv கலவையான வரவேற்பை பெற்றது. அது நிறுத்தப்பட்ட நிலையில் எஸ்யூவி செக்மென்ட்டில் ஹோண்டாவுக்கு இந்தியாவில் காரே இல்லை என்ற நிலை நிலவியது. தற்போது இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவிக்கான தேவை மிக மிக அதிகமாக உள்ள நிலையில்தான், ஹோண்டா சற்றே தாமதமாக இதில் கால் பதித்துள்ளது.
டொயோட்டா ஹைரைடர், மாருதியின் கிராண்ட் விட்டாரா, கியா செல்டாஸ், ஹுண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (VW Taigun) ஆகியவற்றுக்கு போட்டியாக ஹோண்டாவின் எலவேட் பெட்ரோல் எஸ்யூவி பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட போட்டியாளர்களில் பலரும் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே தருகிறார்கள். அதாவது, செல்டாஸ் மற்றும் கிரெட்டாவை தவிர மற்றவர்கள் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே தருகிறார்கள். எனவே இன்ஜின் ஆப்ஷன் ஹோண்டாவுக்கு பிரச்சினையில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட வாகனங்களில் பெரும்பாலானவை நல்ல இன்ஜின் பவர் கொண்டவை. எனவே எலவேட் நிஜமாகவே போட்டியாக உள்ளதா, அல்லது பெயருக்கு ஒரு மிட் சைஸ் எஸ்யூவியை மட்டுமே அறிமுகம் செய்துள்ளதா என்பதே இப்போது கேள்வியாக மாறியுள்ளது. இதற்கு காரணம், எலவேட்டின் இன்ஜின் பவர் குறைவாக இருக்கிறது என்பதுதான்.
டார்க் என்ன: கார் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும். பவர் என்பதை விடவும், அந்த காரின் "டார்க்" (torque) எவ்வளவு என்பதுதான் முக்கியம் என்பது. பொதுவாக டீசல் கார்களில் torque அதிகமாக இருக்கும். எனவேதான் டீசல் கார் ஓட்டுவோருக்கு 80 கி.மீ வேகத்தை தாண்டிய பிறகு முகத்தில் ஒரு ஹேப்பி தானாக தாண்டவமாடும். ஆக்சிலேட்டரில் கால் வைத்ததும் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் அதற்கு காரணம். ஆனால் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஊறு என்பதால் மாருதி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் போன்றவை இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை மட்டுமே தருகின்றன. மேலே குறிப்பிட்டவற்றில் மாருதி தவிர்த்த மற்ற பிராண்ட்களை பெட்ரோலிலேயே torqueக்கை அதிகரித்துள்ளன. டர்போ இன்ஜின்கள் இதற்கு உதவுகின்றன. செல்டாஸ், கிரெட்டா பெட்ரோல் வாகனங்களும் குறைந்ததில்லை. இதோ ஒரு ஒப்பீடு.

கிரெட்டா, செல்டாஸ்: ஹுன்டாய் கிரெட்டா 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் அதிகபட்சமாக 242 என்எம் Torque வழங்குகிறது. டர்போ இல்லாவிட்டால் 144 என்எம் டார்க் வழங்குகிறது. மிட் சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிகமாக விற்பனையாகி வரும் ஹுன்டாயின் சிஸ்டர் நிறுவனமான கியாவின், செல்டாசிலும் இதே போன்ற இரு இன்ஜின் ஆப்ஷன்கள். அதே அளவுக்கு டார்க் வழங்குகிறது. தேவைப்படுவோர் தேவைப்படும் இன்ஜின் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளலாம். 242 என்எம் டார்க் என்பது வாகன ஓட்டிகளுக்கு ரியலாக ஃபன் தரக்கூடியது. எனவே அவர்கள் அந்த ஆப்ஷனையும், ஃபேமிலி டிரைவர்கள் நார்மல் இன்ஜினையும் செலக்ட் செய்ய முடியும்.

ஜெர்மன் கார்கள்: ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றின் 1 லிட்டர் டர்போ இன்ஜின்கள் 178Nm டார்க் வழங்குகின்றன. அதுவே 1.5 லிட்டர் டர்போ வேரியண்ட் செலக்ட் செய்தால் 250 என்எம் டார்க் கிடைக்கும். ஜெர்மன் சகோதர நிறுவனங்களான இவற்றின் இந்த அதிகபட்ச டார்க் மற்றும், ஸ்டீரிங் ஃபீட்பேக், வாகனத்தின் ஹேண்ட்லிங் அனுபவத்திற்காகவே கார் ஓட்டுவதில் அதீத விருப்பமுள்ளவர்கள் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகனை நோக்கி ஓடுகிறார்கள்.

ஹோண்டா கார் விவரம்: அதேநேரம், ஹோண்டா எலவேட் எப்படிப்பட்ட கார் (honda elevate specifications) என்பதை பார்த்தால் உங்களுக்கே ஒரு ஐடியா வரும். பெயருக்கான மிட் சைஸ் எஸ்யூவியாக இல்லாமல் நல்ல நீளமாகவே உள்ளது இந்த வாகனம். 4312 எம்எம் நீளம் என்பது ஏறத்தாழ செல்டாஸ், கிரெட்டாவிற்கு இணையானது. குஷாக், டைகுனை விட நீளமானது. 1,650mm உயரம், 2,650mm வீல்பேஸ் ஆகியவையும் செல்டாசை மாதிரி உள்ளன. அதேநேரம் மிட் சைஸ் எஸ்யூவியிலேயே அதிகபட்சமாக 458 லிட்டர் அளவுக்கு boot space (டிக்கி) பெரிதாக உள்ளது. 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள கார் இது. கிரெட்டா 190mm கிரவுண்ட் கிளியரன்ஸ் காராகும். அந்த வகையில் எந்த ஸ்பீட் பிரேக்கரையும் பற்றி கவலைப்படாமல் ஓட்டலாம். ஆனால் உயரம் அதிகமானால் அதி வேகத்தில் ஹைவேயில் செல்வதோ, சாலை திருப்பங்களில் வேகமாக போவதோ டிரைவர்களுக்கு கஷ்டமானதாக மாறக்கூடும்.
ஹோண்டா சிட்டி இன்ஜின்: ஹோண்டா சிட்டியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் Elevateலும் உள்ளது. 145 என்எம் டார்க்கை எலவேட் வழங்குகிறது. கண்டிப்பாக கார் ஆர்வலர்களுக்கு இது ஏமாற்றம்தான். 175 என்எம் டார்க்காவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் குறைவான டார்க்கை வழங்கியுள்ளது ஹோண்டா. 1 லிட்டர் இன்ஜினிலேயே அதிக டார்க் வழங்குவது ஸ்கோடாவும், ஃபோக்ஸ்வேகனும்தான். ஆனால் கியாவும், ஹுன்டாயும், அதிக டார்க்குக்காக இன்னொரு இன்ஜின் ஆப்ஷன் தந்ததை போல ஹோண்டா தந்திருக்கலாம். தானியங்கி வாகன கட்டுப்பாடு இயக்கமான ADAS, பெரிய வாகனத்திற்கான லுக், ஹோண்டாவின் சர்வீஸ் நெட்வொர்க், நம்பகமான இன்ஜின் ஆகியவைதான் விற்பனைக்கான பாயிண்ட்டாக உள்ளது. மற்றபடி டிரைவர்களுக்கான காராக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications