தலைக்கனம் பிடித்து திரிந்தேன்! தாதாசாகேப் பால்கே நாயகன் மிதுன் வாக்குமூலம்
மும்பை: இந்திய சினிமாவின் அடையாளமாக இன்று கொண்டாடப்படும் மிதுன் சக்ரவர்த்தி, மேற்கு வங்கத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
பலருக்குப் பாலிவுட் நடிகராக மிதுன் சக்ரவர்த்தியைத் தெரியும். சிலருக்கு அவரை ராஜ்ய சபா உறுப்பினராகத் தெரியும். ஆனால், கடந்த தலைமுறை மேற்குவங்க இளைஞர் பட்டாளத்திற்குத்தான் மிதுன் சக்ரவர்த்தியின் உண்மையான முகம் என்ன என்பது தெரியும். செங்காலியில் 'ரோவக்பாஜ்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. நம்ம ஊரில் 'புள்ளிங்கோ' என அடையாளம் வைத்து அழைப்பதைப் போன்றது இந்த வார்த்தை. இந்த அடிமட்ட மக்களின் பிரதிநிதிதான் மிதுன். அவரது ரசிகர்களைப் பலர் இன்று 'ரோவக்பாஜ்' என்றே அழைக்கப்படுகிறார்கள்.

மிதுன் 1950 ஜூன் 16 ஆம் தேதி மேற்குவங்கத்தில்தான் பிறந்தார். ஆரம்பக் காலத்தில் பெங்கால் திரைத்துறையில் தரைமட்டமான மக்களின் பிரதிநிதியாகத் திரையில் இவர் அடையாளம் காணப்பட்டார். இன்றைக்கு பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்ட மிதுன், மும்பையில் வசித்தாலும் அவரது ஆன்மா பெங்கால் மக்களைச் சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. பாலிவுட் சினிமாவில் தனக்குக் கிடைத்த வெற்றி ஆரம்பக் காலங்களில் தன் தலைக்கு ஏறிவிட்டதாகவும் அதேபோல தனது நடிப்பில் அமெரிக்க நடிகர் அல் பசினோவின் சாயலைத் தழுவிக் கலந்து நடித்ததாகவும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் மிதுன்.
மிருணாள் சென் இயக்கத்தில் 1976இல் வெளியான 'மிர்கயா' படத்தின் மூலம் ஹிந்தி சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய மிதுன், இவ்வளவு வெற்றிகளை வாரிக் குவித்த பின்பும் கூட தனது சுயசரிதையை எழுதாமல் இருக்கிறார். 1982இல் வெளியான டிஸ்கோ டான்சர் திரைப்படம் தான் மிதுன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றும் தந்தது. அதற்கு முன்பே மிருணாள் சென் படம் இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்திருந்தாலும் லோகல் ஆடியன்ஸ் பக்கம் அவர் அதிகம் கால் பதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். யார் இவர் என இந்திய அளவில் திரை உலகத்தினரை வேண்டுமானால் இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம்.

இப்போது தாதாசாகேப் பால்கே விருது கிடைத்துள்ள நிலையில் தனது பழைய நினைவுகளை அசைபோட்டுப் பேசியுள்ள மிதுன், "எனக்குத் தேசிய விருது கிடைத்த உடன் புகழ் போதை தலைக்கு ஏறிவிட்டது. என் நடவடிக்கை மாறிப்போனது. அதைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் வெளியே போ என்று விரட்டி அடித்தனர். அந்தளவுக்கு ஆணவத்திலிருந்தேன்" என்று கூறியுள்ளார். மேலும் "எனது சுயரிசதை பலரையும் வசீகரிக்காது. யாரையும் அது ஈர்க்காது. சொல்லப்போனால் அவர்களை அது ஒழுக்க ரீதியாகக் கீழே இறக்கவும் கூடும். சிலரைக் காயப்படுத்தலாம். இளைஞர்கள் யாரேனும் கடுமையாகக் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு வேண்டுமானாலும் கொஞ்சம் ஆறுதலை அளிக்கலாம்" என்று மிதுன் கூறியுள்ளார்.
அவர் சொல்வது உண்மைதான். புழுதியிலிருந்து எழுந்த ஒரு பெங்காலி இளைஞரின் துயரம் நிறைந்த கதைதான் மிதுன் சக்ரவர்த்தியின் சொந்த வாழ்க்கை சம்பவங்கள். பசி, பட்டினி, வாய்ப்பு இல்லாமல் வீதிகளில் படுத்து உறங்கியது என பல பக்கங்கள் அதில் புதைந்து கிடக்கின்றன. இதைப் பற்றித் தொடர்ந்து பேசிய மிதுன், "என் கதை மிகவும் ரணகளமானது. வேதனையானது. அதிர்ச்சிகரமானது" என்று தெரிவித்துள்ளார்.

இவரது அக்னிபத், ஜல்லாத், தலால் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டன. அவரது கதாபாத்திரங்கள் பேசப்பட்டன. இவர் தஹதர் கோதா, சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களில் நடித்ததற்காகத் தேசிய விருதுகளையும் வென்றார். இதன் மூலம் இந்திய சினிமாவில் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவ்வளவு ரணகளமான கதைகளைக் கொண்டிக்கும் மிதுன் ரசிகர்களை ஏன் 'ரோவக்பாஜ்' என்று அழைக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கும். அதற்குள் ஒரு வர்க்க பார்வை இருக்கிறது. ஆரம்பக் காலகட்டத்திலேயே அந்த வர்க்க அரசியலை அறிந்தவர் மிதுன்.












Click it and Unblock the Notifications