மார்க் குறைந்ததால் விரக்தி.. ஐஏஎஸ் தம்பதியின் மகள் எடுத்த சோக முடிவு... அதிர்ந்த மும்பை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரின் 26 வயது மகள் குடியிருப்பின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்லூரியில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திராவில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் லிபி ரஸ்தோகி (வயது 26). இவரது தந்தை விகாஸ் ரஸ்தோகி. ஐஏஎஸ் அதிகாரியான இவர் மகாராஷ்டிரா மாநிலம் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி ராதிகா ரஸ்தோகியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி.

லிபி ரஸ்தோகி ஹரியானா மாநிலம் சோனிபத்தில் உள்ள கல்லூரியில் எல்எல்பி படித்து வந்தார். இந்த நிலையில் லிபி வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் இரவு உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் லிவி குடியிருப்பின் 10 வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு ஜிடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லிபியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் லிபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இளம்பெண் லிபி கல்லூரியில் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications