சட்டப்பேரவையோ, சாலையோ.. சண்டை எங்கிருந்தாலும் வெற்றி எங்களுக்கே! - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
மும்பை: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்தாலும், சாலையில் மோதல் நடந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பாஜகவின் திட்டம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்தது. 21 ஆம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 38 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் அவர்கள் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மாளிகையை காலி செய்த உத்தவ்
இந்த நிலையில் பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்.

சரத் பவார் கருத்து
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். இதனிடையே நேற்று மேலும் 4 சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சரத் பவார் கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத் கருத்து
இந்த நிலையில், தங்களுக்கு தேசிய கட்சி ஆதரவளிப்பதாக உறுதியளித்து இருக்கிறது என தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதனிடையே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "நாங்கள் மனம் தளர மாட்டோம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். ஒருவேளை மோதல் சாலையில் நடந்தாலும் நாங்கள் வெல்வோம். நாங்கள் அவர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது. சட்டப்பேரவைக்கு வருமாறு அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். மகா விகாஷ் அகாடி எஞ்சியிருக்கும் 2.5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும்." என்றார் உறுதியுடன்.












Click it and Unblock the Notifications