‘லேண்டிங் கியரில்’ கோளாறு.. நூலிழையில் தப்பிய 192 பயணிகள்! இண்டிகோ விமானம் தரையிறங்கியது எப்படி?
மும்பை: புனேவில் இருந்து கவுஹாத்திக்கு இன்று இண்டிகோ விமானம் 192 பேருடன் பயணித்தது. வானில் பறந்தபோது 'லேண்டிங் கியரில்' பிரச்சனை கண்டறியப்பட்டது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு கோர விபத்து நடக்கலாம். இதனை உணர்ந்து பைலட்டுகள் திறமையாக செயல்பட்டு 'லோ பாஸ்' முறையில் மீண்டும் விமானத்தை வெற்றிக்கரமாக புனேவில் தரையிறக்கிய நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 6E 0623 (VT-IZE) என்ற விமானம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து அசாம் தலைநகர் கவுஹாத்திக்கு இன்று காலையில் புறப்பட்டது. இது ஏர்பஸ் ஏ320 ரக விமானமாகும்.

இந்த விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் என்று மொத்தம் 192 பேர் இருந்தனர்.
இந்த விமானம் காலை 7.15 மணிக்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து வானில் பறந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. விமானத்தின் 'லேண்டிங் கியர்' பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
'லேண்டிங் கியர்' என்றால் விமானத்தின் கீழ் பகுதியில் உள்ள சக்கரத்தை குறிக்கும். இந்த சக்கரம் ரொம்ப முக்கியமானது. இந்த சக்கரம் தான் விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கும், தரையிறங்குவதற்கும் மிகமிக முக்கியம்.
பொதுவாக விமானம் வானில் பறக்க தொடங்கியவுடன் 'லேண்டிங் கியர்' செயல்பட்டு சக்கரத்தை விமானத்துக்குள் இழுத்துவிடும். ஆனால் இந்த விமானத்தில் விமானம் மேலேழும்பினாலும் உள்ளே செல்லவில்லை. சக்கரங்கள் விமானத்தின் அடியில் மடங்காமல் அப்படியே நின்றுவிட்டது.
இதனை விமானி கண்டறிந்தார். உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க நினைத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கூறினார். அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் அவசர நிலையை அறிவித்தனர்.புனே விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ளதால் விமானப்படை அதிகாரிகள் முழுவீச்சில் களமிறங்கினர்.
இண்டிகோ விமானம் தரையிறங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுவாக ஒரு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கும்போது எப்படி வேண்டுமானால் விபத்து நடக்கலாம். விமானம் தீப்பிடிக்கவோ அல்லது சக்கரங்கள் உடையவோ வாய்ப்புள்ளது. இண்டிகோ விமானம் தரையிறங்கும்போதும் இந்த விபத்து பீதி இருந்தது. இதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
மேலும் இந்த இண்டிகோ விமானம் அப்போது தான் வானில் பறக்க தொடங்கியது. இதனால் விமானத்தில் அதிகளவில் எரிபொருள் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த எரிபொருளுடன் விமானம் தரையிறங்கினால் அதிக எடையின் காரணமாக விமான டயர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு வெடிக்கலாம். இதனால் விமானம் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளில் வானிலேயே பலமுறை சுற்றி எரிபொருளை காலி செய்தது.
இதையடுத்து 'லோ பாஸ்' (Low Pass) முறையில் விமானம் தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 'லோ பாஸ்' என்பது விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேலே சிறிது தூரத்தில் விமானம் வலம் வரும். இதன்மூலம் விமானத்தின் கீழ் பகுதியில் உள்ள 'லேண்டிங் கியர்' (தரையிறங்கும் சக்கரம்) சரியாக இருக்கிறதா? தரையிறங்க வசதியாக சக்கரங்கள் இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கீழே இருந்தபடியே பார்த்து ஆய்வு செய்தனர்.
'லேண்டிங் கியர்' சக்கரம் தரையிறங்க ஏதுவாக சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இண்டிகோ விமானம் பத்திரமாக காலை 9.04 மணிக்கு தரையிறங்கியது. 2 தீயணைப்பு வாகனங்களும், 2ஆம்புலன்ஸ்களும் புடைசூழ விமானம் பே நம்பர் 7 என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. விமான சக்கரங்கள் பரிசோதிக்கப்பட்டன. எந்த பிரச்சனையும் இல்லை என்றவுடன் விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட முழு அவசரநிலை காலை 9.10 மணிக்கு விலக்கி கொள்ளப்பட்டது.
அதன்பிறகு பயணிகள் 'ஏரோபிரிட்ஜ்' மூலம் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டனர். இப்படியான பைலட்டுகளின் சாதுர்யம் மற்றும் இந்திய விமானப்படை மற்றும் விமான நிலைய ஊழியர்களின் துரித செயல்பாட்டால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு 192 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
