தரம் தாழ்ந்த அரசியல்! இது இந்துத்துவா இல்லை! கேசிஆர் மீட்டிங்கிற்கு பின்.. பாஜகவை தாக்கிய தாக்கரே
மும்பை: ‛‛இந்துத்துவா, தரம் தாழ்ந்த அரசியல் செய்வது இல்லை'' என மத்திய பாஜக அரசை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தாக்கி பேசினார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மத்திய பாஜகவை தொடர்ந்து விமர்சிக்கிறார். பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் இல்லாத 3ம் அணியை தேசிய அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களான ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமரான தேவேகவுடா ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

இருமுதல்வர்கள் சந்திப்பு
இதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பை ஏற்று இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மும்பையில் அவரை சந்தித்தார். இருவரும் மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டனர். பின்னர் அரசியல் குறித்து முக்கிய விஷயங்களை இருவரும் பேசினர். 3வது அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உத்தவ்தாக்கரே கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது உத்தவ்தாக்கரே மத்திய பாஜக அரசை விமர்சித்தார். அவர் கூறியதாவது:

இந்துத்துவா இல்லை
நாட்டில் நிலவும் அசாதாரண சூழலையும், தரம் தாழ்ந்த அரசியலையும் முன்னெடுப்பது இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்பது ஒருபோதும் வன்முறையாகவோ, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்காது. இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற தற்போது கேள்வி எழுகிறது.

புதிய துவக்கம்
மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருக்க வேண்டிய நல்ல சூழல் தற்போது இல்லை. நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் பிரசாரம் செய்து ஒருவரை இழிவுப்படுத்துகின்றனர். இத்தகைய அரசியல் வேலைக்கு ஆகாது. இதனால் நாங்கள் புதிய துவக்கத்தை முன்னெடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் இருந்து உருவான கூட்டணிகள் வெற்றி பெற்றுள்ளன. சிவாஜி மகாராஜ், பாலாசாஹேப் ஆகியேரிடம் இருந்து நாடு பெற்ற உத்வேகத்துடன் நாங்கள் போராட விரும்புகிறோம்," என்றார்.

நல்ல சந்திப்பு
மேலும் சந்திரசேகரராவ் உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, ‛‛இன்றைய சந்திப்பு நல்ல பலனை கொடுத்தது. இன்னும் சில நாட்களில் ஐதராபாத் அல்லது வேறு இடத்தில் அமர்ந்து கூட்டணி குறித்து விரிவாக பேச உள்ளோம்'' என்றார்.

அது ஒரு காலம்
இன்று சந்தித்து கொண்ட இருமுதல்வர்களும் ஒருகாலத்தில் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தான். 2019க்கு முன்பு வரை மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சிவசேனா இருந்தது. 2019 தேர்தலில் கூட்டணியை விட்டு விலகிய சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இதேபோல் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி/தான் சந்திரசேகரராவும் பாஜகவுடனான உறவை தூரத்தில் வைக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications