மகாராஷ்டிராவில் நவ.20-ல் தேர்தல்:மகா விகாஸ் அகாடியில் 100 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் ஒரே கட்ட சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாம்; மேலும் காங்கிரஸ் கட்சி நடத்திய சர்வே முடிவுகளின் அடிப்படையில் 10 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு கண்டிப்பாக சீட் மறுக்கப்படுமாம். டெல்லி மற்றும் மும்பையில் நடந்த ஆலோசனைகளிலேயே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்னர் அறிவித்தது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும். இதேபோல 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.

maharashtra assembly election 2024 jharkhand assembly election 2024 election commission 2024

அண்மையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் மிதமிஞ்சிய நம்பிக்கையால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்யாமல் கோட்டை விட்டது காங்கிரஸ். இந்த மரண அடியில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ள வியூகம் வகுத்துள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பல்வேறு வியூகங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் கூட்டணியில் குறைந்தது 100 தொகுதிகளைக் கேட்டுப் பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 147 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களில் வென்றது. அதேபோல 121 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வென்றது. பின்னர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இதேபோல கடந்த தேர்தலில் பாஜக அணியில் 126 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களில் வென்றது. தற்போது சிவசேனாவும் உடைந்துவிட்டது. இதனால் மகா விகாஸ் அகாடியில் எப்படியும் 100 இடங்களைப் போராடி பெறுவது என்பது காங்கிரஸின் வியூகங்களில் ஒன்றாம்.

மேலும் காங்கிரஸ் கட்சி மேலிட உத்தரவுப்படி நடத்தப்பட்ட சர்வேயில், ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிரான அதிருப்தி அலை மகாராஷ்டிராவில் தீவிரமாக உள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் 10 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் மீதும் கடும் அதிருப்தி இருக்கிறது. இந்த 10 எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும் சீட் கொடுக்கப்படவே கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணையத் தொடங்கி உள்ளனர். தற்போது மேலும் 10 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கும் சீட் மறுக்கப் போகிறதாம் காங்கிரஸ் மேலிடம். அப்படி சீட் மறுக்கப்பட்டு இவர்கள் அஜித் பவார் கட்சிக்கு போனாலும் கவலையில்லை என்கிறதாம் காங்கிரஸ் மேலிடம். இந்த வியூகத்தை முழு வீச்சில் செயல்படுத்துவது என்கிற முடிவோடு இருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.

அதேநேரத்தில் மகா விகாஸ் அகாடியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், காங்கிரஸுக்கு மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 100 தொகுதிகளை ஒதுக்க முன்வருமா? என்பதும் கேள்விக்குறிதான். இருந்த போதும் காங்கிரஸ் கட்சி குறைந்தது 80 தொகுதிகளிலாவது போட்டியிடும் என்கின்றனர் மகாராஷ்டிரா அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+