மகாராஷ்டிரா: சிவசேனா- பாஜக உறவு முறிவு? துணை முதல்வர் பதவி குறித்து ஷிண்டே மகன் திடீர் மறுப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக மற்றும் சிவசேனா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு தர வேண்டும் என பாஜகவிடம் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாஜகவோ ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே, தாம் துணை முதல்வர் பதவிக்கான போட்டியிலேயே இல்லை; இது தொடர்பாக யாருமே விவாதிக்காமல் முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் கடந்த மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் புதிய ஆட்சி அமைப்பதில் தாமதம் தொடருகிறது.

மகாராஷ்டிராவில் வரும் 5-ந் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புதிய முதல்வர் யார்? துணை முதல்வர்கள் யார்? என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்த நிலையில் பிரதமர் மோடி தலையிட்டார். இதனால் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து தாம் விலகுவதாகவும் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அதே நேரத்தில் உள்துறை இலாகாவுடன் கூடிய துணை முதல்வர் பதவியை மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு தர வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறார். ஆனால் பாஜக மேலிடமோ இதனை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே தமது சமூக வலைதளப் பக்கங்களில் நேற்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில் துணை முதல்வர் பதவி தொடர்பாக தம்மை தொடர்புபடுத்தி கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகின்றன. லோக்சபா தேர்தல் முடிவடைந்த போதே எனக்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக முன் வந்தது. ஆனால் சிவசேனா கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் பதவியையே நிராகரித்துவிட்டேன். துணை முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஆகையால் துணை முதல்வர் பதவி தொடர்பான விவாதங்களில் என்னை இழுக்க வேண்டாம். இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஶ்ரீகாந்த் ஷிண்டேவின் இந்த தன்னிலை விளக்கமும் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications