நள்ளிரவை தாண்டி நடந்த மீட்டிங்.. நேரடியாக தலையிட்ட அமித் ஷா.. மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார்?
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டதட்ட ஒரு வாரம் ஆகப் போகிறது. ஆனால், இன்னுமே அங்கு யார் முதல்வர் என்பதில் தெளிவு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் நேற்று டெல்லியில் அமித் ஷா உடன் மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். நள்ளிரவைத் தாண்டி நடந்த இந்த மீட்டிங்கில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 234ல் வென்றது. குறிப்பாக பாஜக மட்டும் 132 இடங்களில் வென்றது.

அதேநேரம் அங்கு எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
ஆலோசனை: இந்தச் சூழலில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்கள். நள்ளிரவைத் தாண்டி நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த ஆலோசனை சுமூகமாக முடிந்த நிலையில், முதல்வர் யார் என்பதற்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட்டணியில் சிறு பூசல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த சிக்கல்களை எல்லாம் ஆட்சி அமைக்கும் முன்பே சரி செய்ய பாஜக விரும்புகிறது. இதன் காரணமாகவே நேற்று நள்ளிரவைத் தாண்டி கூட்டம் நடந்துள்ளது. அதில் முதல்வர் பதவி மட்டுமின்றி அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், முதல்வர் அறிவிப்பிற்கு முன்னதாக நடைபெறும் இறுதி கூட்டம் இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர விவகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
ஷிண்டே: முதல்வர் பதவிக்குத் தான் தடையாக இருக்க மாட்டேன் என்று ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே கூறிவிட்ட போதிலும், கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இருக்கக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே டெல்லி பாஜக நேரடியாகத் தலையிட்டுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. பாஜக மொத்தம் 132 இடங்களில் வென்றுள்ள நிலையில், ஃபட்னாவிஸை முதல்வராக்க வேண்டும் என்பதில் பாஜக மிகத் தெளிவாக இருக்கிறது.
முன்னதாக ஃபட்னாவிஸ் கூறுகையில், "மகாராஷ்டிரா முதல்வர் பதவியைத் தேர்வு செய்வதில் நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன். இதை நான் பிரதமர் மோடியிடமே சொல்லிவிட்டேன். அவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். எனக்கு எந்தவொரு பேராசையும் இல்லை.. எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும் அதற்காக நான் வருத்தப்படப் போவதும் இல்லை" என்று கூறியிருந்தார்.
பாஜக முடிவு என்ன: அமித் ஷா உடனான கூட்டம் முடிந்துள்ள நிலையில், சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு வருபவர் பாஜகவைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் கூட்டணி கட்சியில் இருந்து இரு துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், ஃபட்னாவிஸை முதல்வர் பதவிக்கு அறிவிப்பதில் வேறு ஒரு சிக்கலும் இருக்கிறது. அதாவது மகாராஷ்டிராவில் இப்போதுள்ள பெரும்பாலான எம்எல்ஏக்கள் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் ஃபட்னாவிஸ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014ல் அவர் ஃபட்னாவிஸ் முதல்வராக அறிவிக்கப்பட்ட போதே அங்கு இதே போல எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அமித் ஷா இந்த விவகாரம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் வினோத் தாவ்டேவுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருந்தார்.
ஷிண்டே: அதேபோல ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பதவி என்பதிலும் குழப்பம் இருக்கிறது. அவர் ஏற்கனவே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தவர். எனவே, அவர் துணை முதல்வர் பதவிக்கு ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை. இதனால் அவரை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications