மேம்பாலத்தில் இருந்து அப்படியே பறந்து விழுந்த BMW! மும்பையில் ஒரே நொடியில் பறிபோன 3 உயிர்
மும்பை: மும்பையின் கோஸ்டல் ரோட்டில் அதிவேகமாக சென்ற BMW கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
சொகுசு கார்களை வாங்குவோர் சில நேரங்களில் துளியும் பொறுப்பு இல்லாமல் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் கூட அதை அதிவேகமாக இயக்குகிறார்கள். இதனால் காருக்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்தே இருக்கிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்துள்ளது.

கொடூர விபத்து
மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருந்து ஹாஜி அலி நோக்கி கருப்பு நிற பிஎம்டபிள்யூ கார் கோஸ்டல் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இதையடுத்து தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்துள்ளது.
உயிரிழப்பு
அங்கு பார்கிங் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் விழுந்துள்ளது. விபத்து குறித்து கோஸ்டல் ரோடு கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 5.20 மணியளவில் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர். காரில் மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். விபத்தில் சிக்கிய நால்வரும் உடனடியாக நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 21 வயதான ஷனாய் கஜ்ஜல், 17 வயதான தைர்யா தர்ஷன் சேத் மற்றும் 19 வயதான ஆதித்யா ஜகஸ்னியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 23 வயதான ஆதித்யா கல்பேஷ்வர் ஓஸ்வால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Over Speed.
— Neetu Khandelwal (@T_Investor_) September 20, 2026
One wrong turn.
A devastating fall.
A chilling CCTV video captures the moment a BMW suddenly veers off Mumbai’s Coastal Road near Lotus Jetty and plunges from the bridge.
Three people lost their lives and one was critically injured in the horrific early Sunday… pic.twitter.com/e13EoGLrk6
சுக்குநூறாக போன விபத்து
விபத்து எந்தளவுக்கு கொடூரமாக இருந்தது என்பதை சேதமடைந்துள்ள காரை பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடிகிறது. பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சைன்போர்டு மீது கார் மோதிய நிலையில், அது முற்றிலும் சேதமடைந்துள்ளது. பிஎம்டபிள்யூ காரின் மேற்கூரை உள்நோக்கி நசுங்கியுள்ளது. முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்துள்ளது. காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கிய நிலையில், பம்பர் கழன்று விழுந்ததுடன், காரின் உட்புற பாகங்கள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளன.
பகீர் வீடியோ
விபத்துக்கான சரியான காரணம் என்ன.. கார் எந்த வேகத்தில் சென்றது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழக்க என்ன காரணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் மேம்பாலத்தின் மீது இருந்து கார் பறந்து சென்று கீழே விழுவது மிக தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது பதறுகிறது. அந்தளவுக்கு விபத்து கொடூரமாக இருந்துள்ளது.
மும்பையில் இந்த கோஸ்டல் ரோட்டில் சொகுசு கார்களை அதிவேகமாக இயக்குவது என்பது தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தான் சூப்பர் கார்கள் ரேஸில் ஈடுபட்டதாக கூறி 7 கார்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். லம்போர்கினி, BMW M2 மற்றும் BMW Z4 உள்ளிட்ட கார்களும் இதில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
