மீண்டும் மீண்டும் கரப்பான்பூச்சி சாப்பாடா.. சர்ச்சைக்குள்ளான வந்தே பாரத் ரயில் உணவு
மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. மீண்டும் மீண்டும் இதே பிரச்னையா என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கரப்பான் பூச்சி இருந்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் ஆட்சிக்கால சாதனைகளில் ஒன்றாக கூறப்பட்டு வருகிறது 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில். இந்த அதிவேக ரயில் சேவையை இந்திய ரயில்வே கடந்த 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்து வைத்தது. சுமார் 800 கிமீட்டர் தூரம் உள்ள நகரங்களுக்கு இடையே இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலைதூர நகரங்களுக்கும் மக்கள் விரைவில் சென்றடையும் வகையில் இந்த ரயில் சேவை கொண்டு வரப்பட்டது.

பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் படுக்கைகள், இருக்கைகளின் வடிவமைப்புகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இந்த ரயில்களின் கட்டணம் வழக்கமான ரயில்களில் வசூலிக்கப்படுவதை விட கூடுதல்தான். என்னதான் பல்வேறு சொகுசான வசதிகள் இருந்தாலும், தரம் சுத்தமாக சரியில்லை என்ற சர்ச்சை தொடர்ந்து எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. ஷீரடியில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் ரயில் சென்றுள்ளது. அந்த ரயிலில் பயணிக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவைப் பிரித்துப் பார்த்தபோது கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில், உணவின் தரம் குறித்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்துக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஐஆர்சிடிசி மன்னிப்பு கோரியுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. உணவு அளிக்கும் சேவை செய்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமையலறை முழுவதும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், "எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்த உணவை சாப்பிட்டுள்ளனர். 80 வயதான தாத்தாவும் இந்த சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டுள்ளார். அவர்கள் அளித்த பருப்பு குழம்பில் இறந்த கரப்பான் பூச்சி இருந்தது. மேலும், தயிர் கடும் புளிப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, ரயில்வேயின் இந்த அலட்சியப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ரேவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த ஒரு பயணி தனது உணவில் "செத்துப்போன கரப்பான் பூச்சி" இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்தார்.
அந்தத் துயரமான சம்பவத்தைப் பற்றி அவரும் புகாரளித்திருந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம், புதுதில்லியிலிருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தனக்கும் மற்ற சக பயணிகளுக்கும் பயணத்தின் போது கெட்டுப்போன பழைய சாப்பாட்டை வழங்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதமும் உணவில் இறந்த கரப்பான்பூச்சி இருந்ததாகப் புகார் எழுந்தது.
தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு மீதான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது வராமல் தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications