மும்பை மேயர் தேர்தலில் 'லாட்டரி' சர்ச்சை! கொந்தளித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில், அங்கு மேயர் பதவி எந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்த லாட்டரி இன்று நடந்துள்ளது. அதில் மும்பை மேயர் பதவி பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேறு எந்த மாநகராட்சிகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மகாராஷ்டிராவில் மட்டும் மேயர் தேர்வு சற்று வித்தியாசமாக நடைபெறும். அதாவது அங்கு மாநகராட்சிகளுக்கான மேயர் பதவி பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓபிசி, பொது பிரிவினருக்குச் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். எந்த பிரிவினருக்கு என்பது எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், 'குலுக்கல் முறை' மூலம் தீர்மானிக்கப்படும். அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையே இதை முடிவு செய்யும். இந்த குலுக்கல் முடிந்த பிறகே, அங்குள்ள அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும்.

மும்பையில் பெண் மேயர்
மகாராஷ்டிராவில் இன்று இந்த லாட்டரி நடந்தது. மும்பை அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர் லாட்டரி சீட்டை எடுத்தார். அதன்படி மும்பை மாநகராட்சிக்கான மேயர் பதவி பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை, புனே, துலே, நாந்தேட், நவி மும்பை, மாலேகான், மீரா பயந்தர், நாசிக், நாக்பூர் என மொத்தம் ஒன்பது மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மற்ற மாநகராட்சிகள்
லாத்தூர், ஜால்னா, தானே ஆகிய மூன்று மாநகராட்சிகள் பட்டியல் சாதியினருக்கு (SC) ஒதுக்கப்பட்டன. அதில் லாத்தூர், ஜால்னா மாநகராட்சிகள் பட்டியலின பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. தானே மாநகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இருவரும் போட்டியிடலாம்.
அகோலா, சந்திரபூர், அகில்யநகர், ஜல்கான், பன்வேல், இச்சல்கராஞ்சி, கோலாப்பூர், உலாஸ்நகர் என மொத்தம் எட்டு மாநகராட்சிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் அகோலா, சந்திரபூர், அகில்யநகர், ஜல்கான் ஆகிய பதவிகள் ஓபிசி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுள்ளது. மற்ற மாநகராட்சிகளில் ஆண்கள் பெண்கள் என இரு தரப்புமே போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கரே எதிர்ப்பு
இருப்பினும், மும்பை மேயர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2 முறையும் மும்பை மேயர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை ஏன் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விசாரிக்கிறோம் என மட்டும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாக்கரே ஷிவசேனாவின் பெட்னேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மும்பையில் ஓபிசி மக்கள் தொகை கணிசமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஓபிசி பெண்கள் என்ற சீட்டையே இவர்கள் லாட்டரியில் போடவில்லை. இது தவறு. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று ஆவேசமாகப் பேசினார்..
மும்பை தேர்தல் முடிவுகள்
சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பாஜக- ஷிண்டே சிவசேனா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தாக்கரே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அது இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 89 இடங்களையும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 இடங்களையும் வென்றுள்ளது. பாஜக-ஷிண்டே சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. அதேநேரம் எந்த கட்சியைச் சேர்ந்தவர் மேயர் என்பதில் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications