ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் குறித்து தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. அதில், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் வெங்கட நாராயணா என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட நாராயணா இந்த பதவியில் ஓராண்டு நீடிப்பார். அமைச்சர் பதவிக்கு இணையான இந்த பதவி தயாரிப்பாளருக்கு வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "வெங்கட நாராயணா கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரை சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படும்போது, அது காவிரி உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று விமர்சித்திருக்கிறார்.
பதவியின் முக்கியத்துவம்
டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பதவி, மாநில அமைச்சருக்கு இணையான பதவியாக பார்க்கப்படுகிறது. டெல்லிக்கும்-தமிழகத்திற்கும் இடையே தூதரை போல பிரதிநிதி செயல்படுவார். மாநிலத்திற்கு தேவையான நிதி உள்ளிட்ட விஷயங்களை கோரிக்கையாக முன்வைக்கவும், அதை கேட்டு பெறுவதிலும் சிறப்பு பிரதிநிதி முக்கிய பங்கு வகிப்பார்.
தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் அல்லது தலைமை செயலாளர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்கிறார்கள் எனில், அவர்களுக்கான நேரங்களை ஒருங்கிணைப்பது பிரதிநிதியின் பணி.
அதேபோல காவிரி, நீட், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விஷயங்களிலும், நீதிமன்ற விவகாரத்திலும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் இணைந்து வழக்கின் போக்குகளை கண்காணிப்பதும், அது குறித்த தகவல்களை தமிழக அரசுக்கு தெரிவிப்பதும் பிரதிநிதியின் பணியாகும்.
வைகோவின் எதிர்பார்ப்பு
இந்த பதவியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்பார்த்திருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலக முயற்சித்து வருகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு பின்னால், டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பதிவியை வைகோ எதிர்பார்த்திருந்தார் என்றும், ஆனால் தற்போது அது வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதால் மதிமுக அதிருப்தியில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications