வெனிசுலா பூகம்பத்தால் இந்தியாவுக்கு வரும் ஆபத்து! 14,000 கிமீ தள்ளி இருந்தாலும் தப்ப முடியாது ஏன்?
வெனிசுலா: வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை 200+ பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால், இது வெனிசுலா மட்டுமின்றி சுமார் 14,000 கிமீ அப்பால் இருக்கும் இந்தியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வெனிசுலாவில் ஜூன் 24ம் தேதி அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டன. 7.2 மற்றும் 7.5 ரிக்டரில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த 125 ஆண்டுகளில் பதிவான வலிமையான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

நிலநடுக்கம்
அத்துடன் அந்த பிராந்தியத்தில் தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இன்னுமே கூட அங்கு நில அதிர்வுகள் தொடர்வதால் அங்குள்ள எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்தியாவுக்கும் இது ஆபத்தாக மாறியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பொறுத்தவரை, இந்த பேரிடர் மிக முக்கியமான தருணத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் காரணமாக இந்தியா ஏற்கனவே தனது எண்ணெய் விநியோக பாதைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. சமீபத்தில்தான் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வந்த போக்குவரத்து தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது வெனிசுலா நிலநடுக்க வடிவில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
பாதிப்பு
குறிப்பாக இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி போன்ற தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ரஷ்யா தனது கச்சா எண்ணெய்க்கு வழங்கும் சலுகையை படிப்படியாகக் குறைத்து வரும் சூழலில், வெனிசுலா ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவின் இறக்குமதியைப் பாதிக்கலாம்.
இது தொடர்பாக EDME இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணால் கண்ணா கூறுகையில், "இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வெனிசுலா சமீபகாலமாக ஒரு முக்கிய கச்சா எண்ணெய் சப்ளையராக உருவெடுத்துள்ளது. எனவே, அங்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் ஏற்படும் எந்தவொரு சிறிய இடையூறும் இந்தியச் சந்தையில் எரிபொருள் விலையைக் கூட பாதிக்கலாம்" என்றார்.
வெனிசுலா உடன் வர்த்தகம்
மத்திய கிழக்கில் நிலவிய நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக அதிகரித்தது. இதனால் தற்போதைய நிலநடுக்கம் என்பது ஒரு பிராந்திய பேரிடராக மட்டும் இல்லாமல், இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகள் நேரடிச் சேதத்தில் இருந்து தப்பினாலும்கூட அங்கு நிலவும் கடுமையான மின் தடை, உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகள் சேதமடைவது மற்றும் துறைமுகங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கப்பல் போக்குவரத்து பல வாரங்கள் தாமதமாகலாம் என்கிறார்கள். வெனிசுலாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக இருக்கும் லா குவைரா ஏற்கனவே பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கப்பல்களில் எண்ணெய் ஏற்றுவது தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது.
சிக்கல்கள்
தென் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு வர வழக்கமாகவே 40 முதல் 50 நாட்கள் வரை ஆகும். தற்போதைய தாமதங்களால் கப்பல்கள் துறைமுகங்களில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கிடைப்பதில் காலவிரயம் ஏற்படும். கப்பல் தாமதங்கள் காரணமாகக் கூடுதல் கட்டணங்களை இந்திய நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவை உயர்த்தக்கூடும்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வெறும் எண்ணெய் இறக்குமதி மற்றும் கப்பல் போக்குவரத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. வெனிசுலாவில் உள்ள முன்னணி எண்ணெய் திட்டங்களில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி விதேஷ் மூலம் இந்தியா கணிசமான நேரடி முதலீடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக சான் கிறிஸ்டோபல் போன்ற திட்டங்களில் இந்தியாவின் கூட்டு முதலீடுகள் உள்ளன. இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்படும் போது, இந்தியாவின் நிதி நலன்களும் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பாதிப்பு தொடரும்!
சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் இருதரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் சுரங்கம், முக்கிய தாதுகள், மருந்துகள் மற்றும் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்க பேரிடருக்குப் பிந்தைய மீட்புப் பணிகளில் வெனிசுலா கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்த புதிய முதலீடுகள் தள்ளிப் போகலாம்!














Click it and Unblock the Notifications